8வது நாளில் ரஷ்ய- உக்ரைன் போர்... நெஞ்சை உலுக்கும் ஒற்றைப் புகைப்படம்
உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து வான் தாக்குதலை ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்துவரும் நிலையில், வெளியான ஒற்றைப் புகைப்படம் பார்ப்பவர்கள் நெஞ்சை உலுக்கியுள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அந்த நகரத்தை மொத்தமாக ரஷ்ய துருப்புகள் சிதைத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இது திட்டமிட்ட இன அழிப்பு என உக்ரைன் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், மரியுபோல் நகரில் ரஷ்ய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தமது இளவயது மகனின் சடலத்தை அள்ளி அணைத்தபடி கதறும் தந்தை ஒருவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி கலங்க வைத்துள்ளது.
கால்கள் இரண்டும் பிய்ந்துபோன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அந்த இளைஞரின் சடலம். குறித்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
வெளியாகியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இரத்தவெறியை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவதாகவே அமைந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் போது 15 அல்லது 16 வயதுடைய மூவர் காலபந்து விளையாட்டில் பொழுதைக்கழித்துக் கொண்டிருக்கையில் ரஷ்ய துருப்புகளின் வான் தாக்குதல் நடந்துள்ளது. இதில் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவயிடத்திலேயே ஒருவர் இறக்க, எஞ்சிய இருவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.
மரியுபோல் நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற விடாமல் திட்டமிட்டே இன அழிப்பை முன்னெடுத்து வருவதாக ரஷ்ய துருப்புகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நகர மேயர் Vadym Boychenko.
நகரின் கட்டிடங்கள் மொத்தம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், பலர் காயங்களுடன் தப்பியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களில் பெண்கள், சிறார்கள் மற்றும் முதியவர்களே அதிகம் என நகர மேயர் Vadym Boychenko தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் மரியுபோல் நகரம் இன்னமும் உள்ளது என குறிப்பிட்டுள்ள Vadym Boychenko, இறுதி மூச்சு வரையில் நகரை காப்பாற்ற உக்ரைன் துருப்புகள் போராடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.