புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அடி முன்னோக்கி வைத்துள்ள அதிகாரிகள்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.
அவற்றில் ஒன்று, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவது.
அவ்வகையில், பிரான்ஸ் மட்டுமின்றி ஜேர்மனியுடனும் பிரித்தானியா ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது.
ஒரு அடி முன்னோக்கி வைத்துள்ள அதிகாரிகள்
இந்நிலையில், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் பிரித்தானிய அதிகாரிகள் ஒரு அடி முன்னோக்கி வைத்துள்ளார்கள் எனலாம்.
ஆம், பிரான்சிலிருந்து வரும் சட்டவிரோத புலம்பெயர்வோர் பயன்படுத்தும் சிறு ரப்பர் படகுகள் ஜேர்மனியில் சேமிப்பகங்களில் சேமித்துவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால், அந்த படகுகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மற்றொரு முக்கிய நடவடிக்கையை நேற்று முன்தினம் பிரித்தானிய தேசிய குற்றவியல் ஏஜன்சி அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டார்கள்.
அது என்னவென்றால், Kapitan Andreevo என்னுமிடத்தில் லொறி ஒன்றை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டார்கள். இந்த இடம், துருக்கி முதலான நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் முக்கிய எல்லை கடக்கும் பகுதி ஆகும்.
அந்த லொறியில், 25 சிறு ரப்பர் படகுகள் இருந்தது தெரியவந்தது. அவை பிரான்சுக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
ஆக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய சட்டவிரோத புலம்பெயர்வோருக்காக ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் சிறு ரப்பர் படகுகளை, பிரான்சுக்குச் செல்லும் முன்பே அதிகாரிகள் மடக்கிப் பிடித்துவிட்டார்கள்.
இதனால், அபாயகரமான முறையில் பலர் ஆங்கிலக்க்கால்வாயில் பயணிப்பது தடுக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, ஆட்கடத்தல்காரர்களின் லாபமும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |