மூடப்பட்ட எல்லைகள்... தீவிர எச்சரிக்கையில் ராஜஸ்தான், பஞ்சாப் மாகாணங்கள்
பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா முன்னெடுத்த சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லை மாகாணங்களான ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகியவை தீவிர எச்சரிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளன.
உச்சக்கட்ட உஷார் நிலை
பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு பதற்றத்தையும் எதிர்கொள்ள உள்ளூர் அதிகாரிகள் தயாராகி வருவதால், அனைத்து காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பொது இடங்களில் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் 1,037 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மாகாணம், உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளது. எல்லை முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள அதிகாரிகள், அங்கு வசிக்காதவர்களுக்கு எல்லைக்கு அருகில் நடமாட்டத்தையும் தடை செய்துள்ளனர். மேலும், இந்திய விமானப்படை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
மேற்குப் பகுதியில் போர் விமானங்கள் வானில் ரோந்து செல்வதால், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் பிகானர் விமான நிலையங்களில் இருந்து விமான போக்குவரத்து மே 9 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எல்லை கிராமங்கள்
அத்துடன், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கங்காநகரில் இருந்து ரான் ஆஃப் கட்ச் வரை சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள் வான்வழி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பிகானேர், ஸ்ரீ கங்காநகர், ஜெய்சால்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, நடந்து வரும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பொலிசார் மற்றும் ரயில்வே ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எல்லை கிராமங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன, மேலும் அவசரகால நடவடிக்கைக்காக வெளியேற்றும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |