சிரியாவில் நடந்தது போல்... ரஷ்யா தொடர்பில் கடும் அச்சத்தை வெளிப்படுத்திய போரிஸ் ஜோன்சன்
ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கடும் மோதலை முன்னெடுத்துவர, முதன்முறையாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஆசத் படைகளுடன் இணைந்து ரஷ்ய துருப்புகள் மேற்கொண்ட அதே நடவடிக்கையை உக்ரைனிலும் முன்னெடுப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
இதுவரை ரஷ்ய துருப்புகள் 60கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சமீபத்தில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ரஷ்ய துருப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற களமிறங்கிய ரஷ்ய துருப்புகள், இரண்டு வாரங்களுக்கும் மேலாக உக்ரைனில் சேதம் விளைவித்து வருவது கண்டிப்பாக ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைக்கும் எனவும்,
தமது திட்டத்தை நிறைவேற்ற அவர் உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் நிலைக்கு செல்வார் எனவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை, இவ்வாறான தகவலை ரஷ்யா தொடர்பில் எந்த உலகத் தலைவரும் பகிரங்கமாக அறிவிக்காத நிலையில், போரிஸ் ஜோன்சன் மட்டும் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அது அமெரிக்காவுக்கு சொந்தமானது எனவும் தற்போது ரஷ்யா கூறிவருகிறது. இது அவர்களின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை எனவும், அவர்கள் உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திவிட்டு, போலியான செய்திகளால் திசைதிருப்ப முடியும் எனவும் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் ரஷ்ய துருப்புகள் என்ன செய்தது என்பது தெரியும், பிரித்தானியாவிலும் அவர்கள் ரசாயன தாக்குதல்களை முன்னெடுத்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார் போரிஸ் ஜோன்சன்.