30 ஆண்டுகளாக கடும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட நபர்: இறுதியில் தெரியவந்த உண்மை
அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்த ஒருவர் மூன்று தசாப்தங்களாக கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையில், அது அரிதான மரபணு நிலை என கண்டறியப்பட்டுள்ளது.
வயிற்றுப்போக்கால் அவதி
தற்போது 33 வயதாகும் அந்த நபர் 2 மாத குழந்தையாக இருக்கும் போதே, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், குறைந்தபட்சம் 8 முறையேனும், இதன் காரணமாக மருத்துவமனை சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் அவரது அந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை பல ஆண்டுகளாக மருத்துவர்களால் உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது. இறுதியில், அரிதான மரபணு காரணமாகவே அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
அதற்கான தீர்வையும் மருத்துவர்கள் பரிந்துரைக்க, அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தினமும் கழிப்பறையில் மணிநேரம் செலவிட வேண்டியதில்லை என்கிறார் அவர்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த நபருக்கு ஏற்பட்ட இந்த நிலை மிக மிக அரிதானது என கூறுகின்றனர் மருத்துவர்கள். அதாவது 1.6 மில்லியன் பேர்களில் ஒருவருக்கு இப்படியான சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200
அமெரிக்காவில், இப்படியான அரிதான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200 என்றே கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அந்த நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட மறுத்தாலும், அவர் பாஸ்டன் பகுதியில் குடியிருப்பவர் எனவும், விற்பனை பிரதிநிதியாக செயல்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.
தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக 2 வயதில் இருந்தே, கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வந்துள்ளார். முட்டை, மீன், பால் பொருட்கள் உட்பட ஒரு பட்டியலே அவர் பின்பற்றி வந்துள்ளார்.
13 வயது வரையில் பல்வேறு சிகிச்சை
பாஸ்டன் மருத்துவர்கள் முதலில் அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவர் ஆரோக்கியமான எடையுடன் இருப்பதாகவும் ஆனால் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும் சொன்னார்கள்.
13 வயது வரையில் பல்வேறு சிகிச்சை முறைகளை அவர் பின்பற்றியுள்ளார். ஆனால் வயிற்றுப்போக்கில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. மட்டுமின்றி, வயிற்றுப்போக்கு தீவிரமடையவும், இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இறுதியில், அவரது 33வது வயதில் அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட, தற்போது வயிற்றுப்போக்கில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுள்ளார் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |