ஆற்றில் விழுந்த தந்தை, சகோதரி: ஒரு மணி நேரம் போராடி நீந்தி காப்பாற்றிய 7 வயது சிறுவன்
அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்றுவதற்காக, ஒரு மணி நேரம் போராடி நீந்திச் சென்று உதவி கிடைக்க ஏற்பாடு செய்த, 7 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவன் பவுஸ்ட் என்பவர் தமது 7 வயது மகன் சேஸ் மற்றும் 4 வயது மகள் அபிகாயிலுடன் அங்குள்ள செயின்ட் ஜான்ஸ் நதியில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
திடீரென நதியில் ஏற்பட்ட சுழல் மற்றும் அதிகரித்த தண்ணீரின் வேகத்தால் சிறுமி அபிகால் அடித்துச் செல்லப்பட்டார். சிறுமியை காப்பாற்ற ஸ்டீவன் படகில் இருந்து குதித்துள்ளார், அதே வேளை சிறுவன் சேஸ் கரையை நோக்கி வேகமாக நீந்தியுள்ளார்.
ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு கரை வந்து சேர்ந்த சிறுவன், துரிதமாக செயல்பட்டு அருகாமையில் இருந்த குடியிருப்பில் உதவி கேட்டுள்ளார்.
இதனையடுத்து ஜாக்சன்வில்லி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்து, நதியில் தத்தளித்த குடும்பத்தை காப்பாற்றியுள்ளனர்.
சிறுமி மட்டும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருந்ததால் சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடி, உதவிக்காக காத்திருந்துள்ளார் என ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.