தீயாக பரவும் புதிய டிக்டோக் சவால்... மூளைச்சாவடைந்த 12 வயது சிறுவன்: எச்சரிக்கை செய்தி
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் புதிய டிக்டோக் சவாலை முயற்சித்த 12 வயது சிறுவன் மூளைச்சாவடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டோக் போன்ற சமூக ஊடகத்தில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய சவால் ஒன்று பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில்., 12 வயதேயான யோசுவா ஹைலீசஸ் மார்ச் 22ம் திகதி குளியலறையில் பேச்சு மூச்சின்றி கிடந்ததை அவரது இரட்டை சகோதரர் கண்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
டிக்டோக் சவாலின் ஒரு பகுதியாக யோசுவா தன்னை ஒரு ஷூலஸால் மூச்சுத் திணற முயற்சித்ததாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர்.
மட்டுமின்றி சில நாட்களுக்கு முன்னர், யோசுவா தம்மால் ஒரு நிமிடம் வரையில் மூச்சு விடாமல் இருக்க முடியும் என சகோதரரிடம் சவால் விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யோசுவா தொடர்பில், அவரது தந்தை கண்கலங்கியுள்ளார்.
தமது மகன் ஒரு போராளி எனவும், மிக விரைவில் அவர் மீண்டு வருவார் எனவும், அவருக்காக தினமும் வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை படுக்கையில் இப்படி யோசுவாவை பார்ப்பது நெஞ்சை நொறுக்குவதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, யோசுவா மூளைச்சாவடைந்ததாகவும், இறுதி கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் நொறுங்கிப் போயுள்ள யோசுவா குடும்பத்தினர், மீண்டு வருவான் என எதிர்பார்த்தோம், எங்களை ஏமாற்றி விட்டான் என கண்கலங்கியுள்ளனர்.
யோசுவாவுக்கு ஏற்பட்ட நிலையை அறிந்து இனி இதுபோன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சவால்களில் இளையோர் ஈடுபட கூடாது என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


