மிட்டாய் வாங்க கடைக்கு சென்ற சிறுவன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்
மிட்டாய் வாங்க கடைக்கு சென்ற சிறுவன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிசய சம்பவம்
6 வயது சிறுவனான ஆரிஃப் கடந்த 2008ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி, மாலை 4 மணியளவில் மிட்டாய் வாங்குவதற்காக தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால், அச்சிறுவன் வீட்டுக்கு திரும்பி வராமல் காணாமல் போயுள்ளார்.
இதனால், சிறுவனின் பெற்றோரான எஹ்சான் மற்றும் அஃப்ஷானா கான் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 23 வயதான ஆரிஃப் தனது குடும்பத்தை ஹரியானாவின் பஞ்ச்குலாவில் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து ஆரிஃப் கூறுகையில், "நான் மிட்டாய் வாங்க சென்றபோது வீட்டிற்கு அருகில் இருந்தவரை பார்த்தேன். அவரை பின்தொடர்ந்து சென்றால் வீட்டிற்கு வந்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால், அவர் ஒரு காரில் ஏறி சென்று விட்டார். பின்னர் நான் வழி தெரியாமல் குர்கானை அடைந்தேன்.
அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் என்னை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், பல வருடங்களாக பல்வேறு அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களில் தங்கினேன்.
அப்போது, வீட்டிற்கு சென்று இணைவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், காலப்போக்கில் அதுவும் மறைந்து விட்டது" என்றார்.
இதனிடையே சிறுவனை தேடி அவரது பெற்றோர்கள் மாநிலங்கள் மற்றும் பல்வேறு குழந்தை பராமரிப்பு இல்லங்களுக்குச் சென்றனர். ஆனால், மார்ச் 24 அன்று ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஆரிஃப் கிடைத்துவிட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
ஆரிஃப் சோனிபட்டில் உள்ள ஒரு அரசு பராமரிப்பு நிறுவனத்தில் தங்கியிருந்தார். அவர் கல்லூரியில் படித்துவிட்டு தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |