விபரீதத்தில் முடிந்த பன்ஜி ஜம்ப் சாகசம்., நிச்சயம் செய்த நபர் கண்முன் இளம்பெண் உயிரிழப்பு
திருமண நிச்சயம் செய்த நபர் கண்முன்னே இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவோ பாவ்லோ மாநிலத்தில், பன்ஜி ஜம்ப் சாகச விளையாட்டில் கலந்துகொண்ட 21 வயது இளம்பெண் மரியா (Maria Eduarda Rodrigues de Freitas) உயிரிழந்தார்.

அவர் Skeleton பாலம் எனப்படும் இடத்தில் பன்ஜி ஜம்ப் செய்ய முயன்றபோது, பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமல் தவறுதலாக தள்ளப்பட்டதால் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இந்த சம்பவம் அங்கு இருந்த பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. “கயிறு, கயிறு” என்று சத்தமிட்டும், எந்தவித தடுப்பும் செய்ய முடியாமல் அவர் பள்ளத்தாக்கில் விழுந்தார்.
உடனடியாக அவசர சேவை குழுவினர் வந்த போதும், அவர் உயிர் இழந்துவிட்டார் என்பதை மட்டுமே உறுதி செய்ய முடிந்தது.
மரியா சம்பவத்திற்கு முன் சமூக வலைதளத்தில் பாலம் மற்றும் ஜம்ப் பேண்ட் புகைப்படங்களை பகிர்ந்து, “என்னை யார் பைத்தியமாக பாலத்தில் இருந்து குதிக்க அனுமதித்தார்?” என்று எழுதியிருந்தார். அந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
அவரை திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்த நபர் அங்கு இருந்ததாகவும், விபத்து நடந்ததும் அவருக்கு உடல்நலக்குறை ஏற்பட்டதாகவும், மருத்துவ உதவி தேவைப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, நிகழ்வை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |