தாய்ப்பால் தானம் செய்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பெண்
தமிழகத்தில் 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஸ்ரீவித்யா.
கோயம்புத்தூரின் வடவள்ளி அருகே பி.என்.புதூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா(27), இவருக்கு அசிந்தியா (வயது 4) என்ற மகனும், ப்ரக்ருதி (10 மாதம்) என்ற மகளும் இருக்கின்றனர்.
மகள் பிறந்த 5வது நாளில் இருந்தே தாய்ப்பாலை தானம் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா.
திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்தி வரும் பவுண்டேசன் மூலமாக, ஸ்ரீவித்யா வழங்கி வருகிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் மகன் பிறந்தபோதே தாய்ப்பால் தானம் குறித்து அறிந்தேன், ஆனால் அப்போது என்னால் செய்ய முடியவில்லை.
மகள் பிறந்த 5வது நாளில் இருந்தே பவுண்டேசன் மூலமாக வழங்கி வருகிறேன், அரசு மருத்துவமனையில் தினமும் 15 குழந்தைகள் பிறக்கின்றன.
சில குழந்தைகள் உடல் எடை குறைவாகவும், ஊட்டச்சத்து இல்லாமலும் பிறக்கின்றன, இவர்களால் தாயிடமிருந்து தாய்ப்பால் அருந்த முடியாமல் போகலாம்.
இவர்களுக்காகவே தாய்ப்பாலை தானம் செய்து வருகிறேன், 10 மாத காலத்தில் 135 லிட்டருக்கு மேல் தாய்ப்பாலை தானமாக கொடுத்து வருகிறேன்.
என் குழந்தைக்கு வழங்கியது போக, மீதம் உள்ள தாய்ப்பாலை அதற்கென கொடுக்கப்பட்ட பிரத்யேக பாக்கெட்டில் சேகரித்து விடுவேன், தன்னார்வலர்கள் வந்து வாங்கிச்செல்வார்கள்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாய்ப்பாலை பரிசோதித்த பின்னர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவரின் இந்த சேவையை பாராட்டி Indian Book Of Science And Book Of Records சான்றிதழும், விருதும் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.