எங்களால் மீண்டும் சுவாசிக்க முடிகிறது: ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பம் உருக்கம்
இப்போதுதான் எங்களால் மீண்டும் சுவாசிக்க முடிகிறது என ஜார்ஜ் ஃப்ளாய்டின் குடும்பத்தினர் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க அமெரிக்க இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என மினியாபொலிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து ஜார்ஜின் இளைய சகோதரர் ஃபிளோனிஸ் ஃப்ளாய்ட் கூறுகையில், இன்று நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம். ஜார்ஜுக்கான விடுதலை எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் விடுதலை.
இந்த வெற்றி மனிதநேயத்துக்குக் கிடைத்த வெற்றி. அநீதியை நீதி வென்றுள்ளது. ஒழுக்கமின்மையை ஒழுக்க நெறிகள் வென்றுள்ளது.
என் சகோதருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அவர், வெறும் டி ஷர்ட்களில் இருக்கும் புகைப்படமாக இருந்துவிடக்கூடாது என நினைத்தேன்.
இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம் என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டார்.
சாலை அருகே பலரும் பார்க்கும் வண்ணம் காவலர் ஒருவராலையே ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணமடைந்தார். வெள்ளை இன காவல் அதிகாரியான டெரக் சாவில் ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சரியாக 9 நிமிடங்கள் ஃப்ளாய்டின் கழுத்தில் தனது காலை வைத்து டெரக் சாவின் அழுத்தியது வீடியோவில் பதிவாகியிருந்தது. என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஃப்ளாய்ட் திணறிக் கொண்டு பேசியது உலகம் முழுவதும் ஒலித்தது.
இனவெறிக் கொலை என தெள்ளத்தெளிவாகத் தென்பட்ட அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மினியபொலிஸ் நீதிமன்றம் இந்த பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது.
இந்தத் தீர்ப்பு கறுப்பின மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.