சும்மா பிரித்தானியாவை மிரட்டவேண்டாம்... மேக்ரானுக்கு ஐரோப்பிய ஆணையம் வைத்த குட்டு!
பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவுப்பகுதியில் பிரான்ஸ் மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்காவிட்டால், அந்த தீவுகளுக்கு மின்சாரத்தைத் துண்டித்துவிடுவோம் என பிரான்ஸ் மிரட்டியிருந்தது.
பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் தீவுகளில் ஒன்றான ஜெர்ஸி தீவுப்பகுதியில் மீன் பிடிக்க பிரான்சுக்கு சொந்தமான 47 மீன்பிடி படகுகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால், அந்த 47 படகுகளில் 12 படகுகளுக்கு மட்டுமே பிரித்தானியா உரிமம் வழங்கியது. இதனால் பிரான்ஸ் மீனவர்கள் கோபமடைந்தனர்.
ஜெர்ஸி தீவுக்கு பிரான்சிலிருந்துதான் மின்சாரம் செல்லுகிறது. ஆகவே, தங்கள் 47 படகுகளுக்கும் பிரித்தானியா உரிமம் வழங்கவில்லையென்றால், மின்சாரத்தை துண்டித்துவிடுவோம் என பிரான்ஸ் மிரட்டல் விடுத்தது.
பிரெக்சிட்டுக்குப் பின் இரு நாடுகளுக்கும் உரசல்கள் இருந்துகொண்டே இருந்த நிலையில், அவ்வப்போது இதுபோல் மிரட்டல் விடுப்பதை பிரான்ஸ் வழக்கமாக்கிக்கொண்டது.
அத்துடன், பிரித்தானியாவுக்கு எரிபொருள், மின்சாரம் முதலான விடயங்கள் வழங்கப்படுவதை தடுக்குமாறும், பழிவாங்கும் நடவடிக்கையாக வரிகள் விதிக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரான்ஸ் வலியுறுத்தியது.
ஆனால், எதிர்பாராத திருப்பமாக, ஐரோப்பிய ஆணையம், சும்மா பிரித்தானியாவை மிரட்டவேண்டாம், உருப்படியாக ஏதாவது தீர்வு காண முயற்சி செய்யுங்கள் என பிரான்சுக்கு குட்டுவைத்துள்ளது.
அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி தன் நாட்டின் லாபத்துக்காக ஐரோப்பிய ஒன்றியத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அது பிரான்சை குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், பிரான்சுக்கு மீன்பிடித்தலால் வரும் வருவாய் பெரிய அளவில் ஒன்றும் இல்லை. ஆனால், பிரான்ஸ் மீன்பிடி விவகாரத்தை இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையாக ஈகோ பார்க்கிறது.
அதுவும், ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்கு பெரும் போட்டி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் தான் தோற்றுப்போனால் தனக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என மேக்ரான் அஞ்சுகிறார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்க விடயம்!