உக்ரைனில் இளம்பெண்ணின் காரை நிறுத்தி சோதனையிட்ட இராணுவ வீரர்கள்: பின்னர் நடந்த எதிர்பாராத ஆச்சரியம்
உக்ரைனில் இளம்பெண் ஒருவரின் குடும்பம் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் இராணுவ வீரர்கள்.
Fastiv நகரில் செக்போஸ்ட் ஒன்றில் நிறுத்தப்பட்ட அந்த காரிலிருந்து இறங்கிய அந்த இளம்பெண் மற்றும் அவரது உறவினர்கள் கார் மீது கைகளை வைத்தபடி குனிந்து நிற்க, வீரர் ஒருவர் காரை சுற்றி வந்து சோதனை செய்துள்ளார்.
அப்போது, தற்செயலாக தன் பின்னால் பார்த்த அந்த இளம்பெண் தன் பின்னால் இராணுவ வீரர் ஒருவர் ஒற்றை முழங்காலில் நிற்பதைக் கண்டுள்ளார்.
என்ன நடக்கிறது என்பது புரியாமல் அவர் திகைக்க, அந்த வீரர் தன் மாஸ்கை அகற்ற, அப்போதுதான் அது தன் காதலர் என்பதை அறிந்த அந்தப் பெண் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகிறார்.
அவர் அளித்த மோதிரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அந்த இளம்பெண் அவரைக் கட்டியணைத்துக்கொள்கிறார். அதற்குப் பிறகுதான் காரில் வந்த மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரிய, அனைவரும் மகிழ்ச்சிக் குரல் எழுப்புகிறார்கள்.
உக்ரைனில், இப்படிப்பட்ட காட்சிகள் சமீபத்திய சில நாட்களாக அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் உள்ளன. பலர் இராணுவ உடையிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள்.
போர் நடக்கிறது என்றால், இன்று என்ற நாள் மட்டும்தானே நமக்கு நிச்சயம், ஆகவேதான் வாய்ப்புக் கிடைத்ததும் திருமணம் செய்துகொண்டோம் என்கிறார் Yaroslava Fedorash என்ற பெண்.