முன்னாள் ஆசிரியையான பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி பள்ளி சீருடைகள் குறித்து தெரிவித்துள்ள கருத்து
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரான், பள்ளிகளில் சீருடைகள் கட்டாயமாக்குவது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் சீருடையைக் கட்டாயமாக்கத் திட்டம்
பிரான்ஸ் தேசிய சட்டசபை, அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு சீருடைகளை கட்டாயமாக்குவது தொடர்பில் மசோதா ஒன்றின் மீது விவாதிக்க உள்ளது.
சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை சீருடைகள் நீக்க உதவுவதோடு, பள்ளிகளில் மதம் சார்ந்த உடைகளை மாணவ மாணவிகள் அணிவதும் தடுக்கப்படும் என இந்த மசோதாவைக் கொண்டுவந்த Roger Chudeau என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் முதல் பெண்மணியின் கருத்து
இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரான், சீருடையை கட்டாயமாக்குதல், பிரான்ஸ் மாணவ மாணவரிடையே சமூக ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவும் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீருடை அணிவதால், பணத்தையும், உடை அலங்காரம் செய்துகொள்ளத்தேவைப்படும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரான், முன்னாள் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.