மத்திய கிழக்கு நாடொன்றில் உளவு பார்த்ததாக கைதான பிரித்தானிய தம்பதி: வினையான மோட்டார் சைக்கிள் பயணம்
ஈரானில் மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது கைது செய்யப்பட்ட பிரித்தானிய தம்பதி மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதமே கைது
கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதி, பிரித்தானிய அரசால் உத்தியோகபூர்வ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், ஈரானில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் ஜனவரி மாதமே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதி மீது தற்போது நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் தகவல்களை சேகரித்ததாக குறிப்பிட்டு ஈரானிய நீதித்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில், உண்மை கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சிப் பணி என்ற போர்வையில், நாட்டின் பல மாகாணங்களில் தகவல்களைச் சேகரித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானிய நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்த தம்பதி உண்மை கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் என்ற போர்வையில் விரோதமான மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறை சேவைகளுடன் தொடர்புடைய இரகசிய நிறுவனங்களுடன் ஒத்துழைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
மேலும், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் அவதானிப்புகளின்படி, புலனாய்வு சேவைகளுடன் இணைந்த பல நிறுவனங்களுடன் இந்த நபர்களின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் விசாரணை நடந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதி தற்போது தென்கிழக்கு நகரமான கெர்மனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 50களின் முற்பகுதியில் இருக்கும் இந்த தம்பதி டிசம்பர் 30 ஆம் திகதி ஆர்மீனியாவில் இருந்து ஈரானுக்குப் பயணம் செய்து, ஜனவரி 4 ஆம் திகதிக்குள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் அவர்கள் தப்ரிஸ், தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர், ஆனால் கெர்மானில் அவர்கள் முன்பதிவு செய்துள்ள ஹொட்டலுக்குச் செல்லும் முன் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் ஈரானிய அதிகாரிகள் பிரித்தானிய தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தம்பதியின் கைது குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |