கொடுங்கனவு முடிவுக்கு வந்தது... ஹமாஸ் விடுவித்த பிரித்தானிய பணயக்கைதியின் தாயார் உருக்கம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இழுபறிகளுக்கு மத்தியில் அமுலுக்கு வந்த நிலையில், பிரித்தானியர் உட்பட மூன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பெண்கள்
கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் முன்னெடுத்து வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது. கடும் இழுபறிகளுக்கு முடிவில் இறுதியாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
இதன் முதற்கட்டமாக பணயக்கைதிகள் மற்றும் சிறைவாசிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரித்தானியரான 28 வயது Emily Damari உட்பட மூன்று பெண்கள் ஹமாஸ் படைகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிடம் ஹமாஸ் படைகள் ஒப்படைக்க, பின்னர் இஸ்ரேல் இராணுவத்தினரிடம் ஒப்பட்டைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு வரவேற்பு இடத்திற்கு வந்தனர், அங்கு மூவரும் தங்கள் தாய்மார்களுடன் உணர்ச்சிபூர்வமான சந்திப்பை நடத்தினர்.
இந்த நிலையில், பிரித்தானியரான எமிலி தமாரியின் தாயார், தனது அன்பு மகள் திரும்பியதைத் தொடர்ந்து, மனதை உருக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 471 நாட்களுக்குப் பிறகு எமிலி இறுதியாக வீடு திரும்பியுள்ளார் என மாண்டி தமாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூரமான சோதனை காலம் முழுவதும் எமிலிக்காக போராடுவதை நிறுத்தாத அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் போராட்ட குணமே எமிலியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது என்றார்.
அக்டோபர் 7 தாக்குதலின் போது ஹமாஸ் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் எமிலி இரண்டு விரல்களை இழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.
எமிலியின் கை கட்டுகளால் சுற்றப்பட்டிருப்பதையும், ஒரு சில விரல் நுனிகள் காணாமல் போயுள்ளதையும் அவர் குடும்ப உறுப்பினர்களுடன் காணொளி அழைப்பில் வந்தபோது காண முடிந்தது.
தென்கிழக்கு லண்டனில்
காஸாவில் எமிலியின் கொடுங்கனவு ஒருழியாக முடிவுக்கு வந்தது என்றே மாண்டி தமாரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு பணயக்கைதியும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், வீடு திரும்பக் காத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மாண்டி தமாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீவிரமான கடைசி நிமிட பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் போர்நிறுத்தம் அமுலுக்கு வர சில மணிநேரங்கள் தாமதமானது. ஒருகட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும் நெருக்கடியும் ஏற்பட்டது.
இறுதியில் ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் மூன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எமிலி தமாரி தனது 20 வயதில் இஸ்ரேலுக்கு குடிபெயர்வதற்கு முன்பு தென்கிழக்கு லண்டனில் வசித்து வந்துள்ளார்.
எமிலி தனது இரட்டை சகோதரர்களான 27 வயது ஷிவ் மற்றும் கலி பெர்மன் ஆகியோருடன் ஹமாஸ் படைகளால் இஸ்ரேலில் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதை அடுத்து தனது மகளின் விடுதலைக்காக லண்டனில் பிறந்த மாண்டி தமாரி தீவிரமாக போராடி வந்துள்ளார்.
இஸ்ரேல் பணயக்கைதிகளுக்கு பதிலாக பாலஸ்தீன கைதிகள் 95 பேர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |