திகிலூட்டும் தருணம்... சிங்கத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய காப்பாளர்
தென்னாபிரிக்காவில் பிரித்தானியரான உயிரியல் பூங்கா காப்பாளர் ஒருவர் சிங்கத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட காணொளி ஒன்று தற்போது வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவின் வடக்கில் அமைந்துள்ள சிங்கங்களுக்கான பூங்கா ஒன்றில் 2018ல் குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த பூங்காவில் காப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் பிரித்தானியரான மைக் ஹாட்ஜ். மட்டுமின்றி Thabazimbi பகுதியில் அமைந்துள்ள சிங்கங்களுக்கான காப்பகத்தை இவரது குடும்பமே பராமரித்தும் வருகிறது.
இந்த வாரத்தில் மீண்டும் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்த அந்த காணொளியில், தடுப்பு வேலியில் இருந்து உள்ளே நுழைந்த மைக் ஹாட்ஜை சிங்கம் ஒன்று நோட்டம் இடுகிறது. பின்னர் திடீரென்று அவரை துரத்தத் தொடங்கியுள்ளது.
இதில் அந்த சிங்கத்ஜ்திடம் சிக்கிக்கொண்ட மைக் ஹாட்ஜ், ஒரு பொம்மையை இழுத்து செல்வது போன்று அந்த சிங்கம் அவரை இழுத்துச் செல்கிறது. இதனிடையே, குறித்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் சுதாரித்துக் கொண்டு வாய்விட்டு கதற, சுற்றும் சட்டை செய்யாத சிங்கம் மேலும் அவரை ஒரு புதருக்குள் இழுத்துச் செல்கிறது.
அப்போது சக காப்பக ஊழியர்களால் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, சிங்கம் அசராமல் மைக் அருகாமையிலேயே நின்றுள்ளது. இறுதியில் வேறு வழியின்றி, அந்த சிங்கத்தை சுட்டுக்கொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மைக் ஹாட்ஜ் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் தப்பியிருந்தார்.
அவரது கழுத்து மற்றும் உடலின் சில பகுதிகளில் சிங்கம் பற்கள் பதித்திருந்தது, மட்டுமின்றி அவரது தாடையும் உடைந்திருந்தது. தீவிர சிகிச்சைக்கு பின்னரே அவர் குணமடைந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.