ரஷ்ய எண்ணெய் கப்பல்களை வேட்டையாட... பிரித்தானியாவின் ஹெலிகொப்டர் படை
ரஷ்யா பயன்படுத்தும் சட்டத்திற்கு புறம்பான எண்ணெய் கப்பல்களை வேட்டையாட பிரித்தானியாவின் சிறப்புப்படையினர் ஹெலிகொப்டர்களில் களமிறங்க உள்ளனர்.
சிறப்புப் படை வீரர்கள்
கடந்த வாரம் அட்லாண்டிக் பெருங்கடலில் நடந்த ஒரு அதிரடித் தாக்குதலில், ரஷ்யாவுடன் தொடர்புடைய ஒரு சட்டவிரோத எண்ணெய் கப்பலைக் கைப்பற்ற பிரித்தானிய அரசு அமெரிக்க சிறப்புப் படைகளுக்கு உதவியது.

இருப்பினும், எந்தவொரு பிரித்தானிய இராணுவ வீரரும் அந்த கப்பலில் கால் பதிக்கவில்லை. ஆனால், தற்போது அரசாங்கத்தால் கண்டறியப்பட்ட ஒரு புதிய சட்டத்தின் அடிப்படையில், செல்லுபடியாகும் தேசியக் கொடி இல்லாமல் இயங்கும் கப்பல்கள் மீது சிறப்புப் படை வீரர்கள் சட்டப்பூர்வமாக முற்றுகையிட முடியும்.
ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளைத் தவிர்க்க நூற்றுக்கணக்கான சட்டத்திற்கு புறம்பான எண்ணெய் கப்பல்களை விளாடிமிர் புடின் நிர்வாகம் களமிறக்கியுள்ளது.
தொடர்புடைய கப்பல்களே சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகம் செய்து வருகிறது.
இனி இந்த எண்ணெய் கப்பல்கள் பிரித்தானிய ஆயுதப் படைகளால் குறிவைக்கப்படலாம். பிரித்தானிய கடல் எல்லைகளில் அடிக்கடி பயணிக்கும் இந்தக் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரஷ்யாவின் இப்படியான கப்பல்களில் 500-க்கும் மேற்பட்டவை மீது பிரித்தானிய அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இருப்பினும், செயற்பாட்டில் உள்ள கப்பல்கள் மீது தற்போது, பிரித்தானியா துருப்புக்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.
மரினேரா கப்பல்
வெளியான தகவலின் அடிப்படையில், கடலில் பறிமுதல் செய்வதற்கான வழிமுறைகளையும் பிரித்தானிய அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
கடந்த வாரம், மரினேரா என்ற எண்ணெய்க் கப்பல் வெனிசுலா மீதான அமெரிக்காவின் எண்ணெய் தடைகளை மீறியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, ட்ரம்பின் வெனிசுலா முற்றுகையைத் தவிர்ப்பதற்காக மரினேரா எண்ணெய் கப்பல் முயற்சி செய்த நிலையில், அதைப் பாதுகாக்கும் வகையில் ரஷ்ய நிர்வாகம் ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியிருந்தனர்.
ஆனால், ரஷ்யாவின் முயற்சிகளை முறியடித்து, அமெரிக்க இராணுவம் அந்தக் கப்பலைக் கைப்பற்றியது. தற்போது, 2018 ஆம் ஆண்டின் தடைகள் மற்றும் பணமோசடிச் சட்டத்தினை சாதகமாகப் பயன்படுத்தி, பிரித்தானியாவும் சொந்த பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவ பலத்தைப் பயன்படுத்தக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |