லண்டனில் சிக்கிய நபரால்... ஐரோப்பாவில் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு
ஐரோப்பாவில் இஸ்ரேலிய மற்றும் யூத நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஆயுதங்களைப் பெற்று சேமித்து வைத்ததாக சந்தேகிக்கப்படும் பிரித்தானியர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
ஹமாஸ் உறுப்பினர்
குறித்த நபர் ஏற்கனவே ஜேர்மன் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளர் என அங்குள்ள அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முகமது என்று மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட அந்த நபர் ஹமாஸ் குழுவின் உறுப்பினர் என்றும், கோடையில் பெர்லினில் இரண்டு முறை சக உறுப்பினரைச் சந்தித்துள்ளார் என்றும் ஜேர்மன் சட்டத்தரணிகள் அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவருக்கு ஐந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றை சேமிப்பதற்காக வியன்னாவிற்கு கொண்டு சென்றார் என்றும் அந்த அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்த நடவடிக்கையின் நோக்கம், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் உள்ள இஸ்ரேலிய அல்லது யூத நிறுவனங்கள் மீது ஹமாஸால் கொடிய தாக்குதல்களை முன்னெடுப்பதாகும் என ஜேர்மன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், ஹமாஸ் படைகள் இதுவரை வெளிநாடுகளில் தாக்குதல் நடத்தியதாக பதிவுகள் இல்லை என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
மூவரில் ஒருவர்
காஸாவில் இருந்து செயல்படும் மூன்று இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதலை, இஸ்ரேல் நிர்வாகம் ஹமாஸ் படைகள் மீது சுமத்தியது. மட்டுமின்றி, போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் போதும் பாலஸ்தீன மக்கள் மீது வான் தாக்குதலை முன்னெடுத்தது.
தற்போது லண்டனில் கைதான ஹமாஸ் ஆதரவாளருக்கு நெருக்கமான ஜேர்மன் நபரும் சமீபத்தில் கைதாகியுள்ளார். கடந்த மாதம் ஜேர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர், லண்டனில் கைதான பிரித்தானியருக்கு நெருக்கமானவர் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கைதான மூவரிடம் இருந்தும் பொலிசார் ஒரு ஏகே-47 ரைபிள், கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கைது நடவடிக்கைகளால் ஐரோப்பாவில் பெரும் அசம்பாவிதங்கள் முறியடிக்கப்பட்டதாகவே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |