ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை
டொனால்ட் ட்ரம்புக்கும் மத்திய கிழக்கின் சக்திவாய்ந்த நாடான சவுதி அரேபியாவிற்கும் இடையே F-35 ஸ்டெல்த் போர் விமானங்களுக்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட உள்ளது.
சல்மானின் வருகை
48 F-35 ரக போர் விமானங்களை வாங்கும் சவுதி அரேபியாவின் கோரிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் தொடர்பில் பென்டகன் முன்வைத்துள்ள சந்தேகங்கள் அனைத்தும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்க வருகைக்கு முன்னர் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் மற்றும் சவுதி அரேபியா முன்னெடுக்கவிருக்கும் இந்த ஒப்பந்தமானது கொள்கை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மத்திய கிழக்கில் இராணுவ சமநிலையை மாற்றும் ஆற்றலையும் கொண்டிருக்கும். மட்டுமின்றி, இஸ்ரேலின் உயர்வான இராணுவ பலத்தை பராமரிப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் இந்த ஒப்பந்தம் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இஸ்ரேலும் தனது கடற்படையில் F-35 ஸ்டெல்த் போர் விமானங்களைக் கொண்டிருந்தாலும், சவுதி அரேபியா முன்னெடுக்கும் இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுடனான அதன் திறன் இடைவெளியைக் குறைக்க உதவும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சவுதி அரேபியா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து நேரடியாகக் கேட்டது.
ட்ரம்பின் ஒப்புதல்
இந்த நிலையில், தற்போது பென்டகன் 48 மேம்பட்ட விமானங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது. இறுதியாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு பல கட்ட ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அமைச்சரவை அளவிலான அனுமதியைப் பெறுதல், ட்ரம்பின் ஒப்புதல் மற்றும் காங்கிரசுக்கு முறையான அறிவிப்பைப் பெறுதல் ஆகியவை இதில் அடங்கும்.

கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், பென்டகனின் கொள்கை அலுவலகம் பல மாதங்களாக சாத்தியமான பரிவர்த்தனையை ஆய்வு செய்து, தற்போது பாதுகாப்புத் துறைக்குள் செயலாளர் மட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்றே தெரிய வருகிறது.
சவுதி அரேபியாவிற்கு F-35 போர் விமானங்கள் விற்கப்படும் என்றால், அது இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுக்கும் என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |