புடினின் அணு ஆயுத கொக்கரிப்புகளுக்கு பிரித்தானியா பயந்துவிடாது...பிரதமர் ஸ்டார்மர் வெளிப்படை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பொறுப்பற்ற அணு ஆயுத கொக்கரிப்புகளுக்கு பிரித்தானியா ஒருபோதும் பயந்துவிடாது என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
பாலிஸ்டிக் ஏவுகணை
பிரித்தானியா தயாரித்துள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்தும் அனுமதியை அளிக்க இருப்பதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
மேலும், விளாடிமிர் புடினின் பொறுப்பற்ற பேச்சால் பிரித்தானியா பயந்துவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுத போருக்கு பிரித்தானியா தயாராகிவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்டார்மர், உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
உக்ரைன் - ரஷ்யா போர் 1000 நாட்களை எட்டியுள்ள நிலையில், முதலில் அணு ஆயுதத் தாக்குதலை முன்னெடுக்கும் வகையில் திருத்தப்பட்ட ஆவணங்களில் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார்.
மேலும், அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளால் ஆதரிக்கப்படும் ஒரு அணு ஆயுத பலமில்லாத நாட்டின் தாக்குதல் காரணமாக இந்த முடிவெடுக்கும் நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை, அமெரிக்கத் தயாரிப்பான ATACMS ஏவுகணைகளை முதன்முதலில் ரஷ்ய பிரதேசத்தில் பயன்படுத்தியதாக உக்ரேனிய ஊடகங்கள் அறிவித்தது. இருப்பினும் உக்ரைன் இராணுவம் இது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியிடவில்லை.
நாங்கள் உறுதி செய்வோம்
ஆனால், உக்ரைன் எல்லையில் இருந்து 70 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ரஷ்ய ஆயுத கிடங்கை இலக்கு வைத்து தாக்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. 6 ATACMS ஏவுகணைகளை உக்ரைன் ஏவியதாக ரஷ்யா தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
186 மைல்கள் தொலைவுக்கு சென்று தாக்கக் கூடிய ATACMS ஏவுகணைகளை தடுத்து அழிப்பது கடினமாகும். மட்டுமின்றி, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 400 சதுர மைல் பரப்பளவு கொண்ட பகுதி உக்ரைன் வசமிருப்பதால், அங்கிருந்து ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரேசிலில் வைத்து பிரித்தானியாவின் அதி நவீன Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும் அனுமதி தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் ஸ்டார்மர்,
புடினுக்கு எதிரான இந்தப் போரில் வெற்றிபெற உக்ரைனுக்குத் தேவையானதை நாங்கள் உறுதி செய்வோம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |