உக்ரைன் அகதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு.., பிரித்தானிய அரசு முக்கிய அறிவிப்பு
உக்ரைன் அகதிகளுக்கு தங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் "Homes for Ukraine" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பிரித்தானியாவுக்கு வரும் உக்ரைனிய அகதிகள் அங்கு உறவினர்கள் யாரும் இல்லை என்றாலும் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவிக்க வேண்டியதில்லை. வாடகை கட்டவேண்டிய அவசியம் இல்லாமல் பிரித்தானிய குடிமக்களின் வீடுகளில் உக்ரைனியர்கள் பாதுகாப்பாக தங்கமுடியும்.
ஏனெனில், இந்த திட்டத்தின் கீழ், உக்ரைனியர்களுக்கு தங்கள் வீடுகளில் தங்க இடம் கொடுக்கும் பிரித்தானிய குடும்பங்களுக்கு அரசாங்கமே மாதந்தோறும் 350 பவுண்டுகள் (456 அமெரிக்க டொலர்) நிதியுதவி வழங்குகிறது.
PC: AFP/Getty Images
இந்த திட்டத்தின்படி, விட்டு உரிமையாளர்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு உக்ரைனியர்களுக்கு தங்குமிடம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அதன்படி, ஆறு மாதங்களுக்கு மொத்தம் 2,100 பவுண்டுகள் அரசாங்கம் வழங்கும்.
தங்குமிடத்தை வழங்குபவர்களும் சரிபார்க்கப்படுவார்கள், அதேபோல், உக்ரேனிய விண்ணப்பதாரர்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் அகதிகள், வீட்டு வசதிகள் தவிர - வேலை, NHS மற்றும் பலன்களுடன் மூன்று ஆண்டுகள் வரை பிரித்தானியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
அகதிகளை ஏற்றுக்கொள்வதில் தாமதம் காட்டுவதாக பிரித்தானிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PC: AP