வெளிநாட்டில் கொண்டாட்டத்தின்போது பார்வையை இழந்த பிரித்தானிய இளைஞர்! 5 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த இழப்பீடு
ஸ்பெயினில் சுற்றுலாப் பயணம் செய்த பிரித்தானியருக்கு பார்வை பறிபோன நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின் அதற்கான இழப்பீடு கிடைத்துள்ளது.
சுற்றுலா பயணம்
பிரித்தானியாவைச் சேர்ந்த டிலோன் கானரி கடந்த 2018ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் சுற்றுலாவுக்கு சென்றிருந்தார்.
அங்குள்ள UV பெயிண்ட் இரவு விடுதியில் அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பெயிண்ட் துப்பாக்கி சுடப்பட்டதில் அவரது இரு கண்களும் பாதிக்கப்பட்டன.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கானரிக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் பார்வை பறிபோனது.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் கானரி தரப்பில் இருந்து விடுதியிடம் இழப்பீடு கோரப்பட்டது.
அவர் உண்மையிலேயே பார்வையற்றவர் என்பதை நிரூபிக்க முடியாததால், முதலில் அவருக்கு வெறும் 2,600 யூரோக்கள் மட்டுமே வழங்கப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில், மல்லோர்கா நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், விருந்தினர்களை பாதுகாக்க கிளப் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும், கானரிக்கு 150,000 யூரோக்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கிளப்பின் காப்பீட்டு நிறுவனத்தால் கானரிக்கு மற்ற பங்கு இழப்பீடு அளிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் கானரி 1,000,000 யூரோக்கள் நஷ்ட ஈடாக கோரியிருந்தார், ஆனால் காயம் அவரது வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதற்கான ஆதாரங்களை அவரால் வழங்க முடியவில்லை என பில்ட் ஊடகம் கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |