பிரித்தானிய சேன்ஸலர் ரிஷி சுனக்கின் மனைவிக்கு ரஷ்யாவுடன் தொடர்பு... சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடயம்
பிரித்தானிய சேன்ஸலர் ரிஷி சுனக்கின் மனைவிக்கு ரஷ்யாவுடன் இருக்கும் தொடர்பால் சர்ச்சை உருவாகியுள்ளது.
பிரித்தானியாவின் சேன்ஸலராக இருக்கும் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். அவருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய செல்வந்தர்கள் மீது பிரித்தானியா தடைகள் விதித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய சேன்ஸலரான ரிஷி சுனக், ரஷ்யாவில் முதலீடு செய்துள்ள பிரித்தானிய நிறுவனங்கள் புடினுக்கு உதவக்கூடும் என்பதால், ரஷ்ய முதலீடு குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும், புதிதாக யாரும் ரஷ்யாவில் முதலீடு செய்யவேண்டாம் என்றும், நாம் ஒன்றிணைந்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதார துயரை ஏற்படுத்தவேண்டும் என்றும், மேலும் இரத்தம் சிந்தப்படுவதை நிறுத்தவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், ரிஷியின் மாமனாரான நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் இயங்குகிறது, அதில் ரிஷியின் மனைவி பங்குதாரராக இருக்கிறார்.
எனவே, ரிஷியின் மனைவிக்கு இருக்கும் ரஷ்ய தொடர்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நேற்று பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் ஒருவர் ரிஷியிடம், உங்கள் மனைவிக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன, அந்நிறுவனம் ரஷ்யாவிலும் இயங்குகிறது. நீங்கள் பின்பற்றாத விடயங்கள் குறித்து நீங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரித்தானிய அரசியல்வாதி, எனவே, எனக்கு எந்த விடயத்தில் பொறுப்பு உள்ளதோ அதைக் குறித்து பேசவே நான் இருக்கிறேன், என் மனைவி அப்படி இல்லை என்றார்.
ஆனாலும் விடாத செய்தியாளர், நாம் உக்ரைனுக்கு உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளோம், வரி செலுத்துவோர் உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்கவும், வீடுகளைத் திறந்துவிடவும் கோரிக்கை விடுத்துள்ளோம், ஆனால், உங்கள் குடும்பம் புடினுடைய அரசால் இலாபம் அடைவது போல் இருக்கிறதே என்றார்.
அப்படி அல்ல என்று எண்ணுகிறேன் என்று கூறிய ரிஷி, நிறுவனங்கள் முடிவு செய்யும் விடயம் அது, எனக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
ரிஷியின் மனைவிக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 490 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.