பிரித்தானிய தூதரக அதிகாரிகள் குடும்பத்துடன் வெளியேற்றம்: உறுதி செய்த பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
சூடானில் கார்ட்டூமில் உள்ள தூதரகத்தில் இருந்து, சிக்கலான மற்றும் துரிதமான ஒரு நடவடிக்கையின் மூலமாக தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
@reuters
பிரித்தானிய சிறப்புப் படைகள் பொதுவாக இத்தகைய பணிகளை மேற்கொள்கின்றன, ஆனால் சூடான் நடவடிக்கையில் அவர்களின் ஈடுபாடு உறுதிப்படுத்தப்படவில்லை.
சூடானில் தற்போதைய சூழலில் தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வேறு வழியின்றி அவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், நமது தூதரக அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்கும், இந்த கடினமான நடவடிக்கையை மேற்கொண்ட ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும் நான் தலை வணங்குகிறேன் என பிரதமர் ரிஷி சுனக் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
@AFP
மேலும், போரை முடிவுக்கு கொண்டுவந்து, பிரித்தானிய மக்கள் பத்திரமாக தங்கள் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய பொதுமக்கள்
கார்ட்டூமில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தில் சுமார் 25 பேர்கள் வரையில் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நூற்றுக்கணக்கான பிரித்தானிய பொதுமக்கள் தற்போதும் சூடானில் சிக்கியுள்ளதாகவே அஞ்சப்படுகிறது.
மேலும், அவர்களுக்காக இன்னொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. சூடான் ராணுவத்திற்கு துணை ராணுவத்திற்கும் இடையே வெடித்துள்ள இந்த போரில் இதுவரை 400 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
@AFP
தலைநகர் கார்ட்டூம் மற்றும் மேற்கு டார்பூர் பகுதி ஆகியவை அண்மைய நாட்களில் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமை உயர்மட்ட கோப்ரா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ரிஷி சுனக், போரினால் பாதிக்கப்பட்ட பாலைவன இராச்சியத்தில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை மீட்பதற்கான திட்டத்தை வகுத்தார்.
இதனிடையே, ரமலான் தொடர்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் இரு பிரிவினரும் ஆயுதங்களைக் கைவிடத் தவறியதாகவே கூறப்படுகிறது.