பிரித்தானிய வீரர்களின் மரண தண்டனை... விளாடிமிர் புடினை பழிவாங்கும்: வெளியாகும் பின்னணி
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளால் சிறைபிடிக்கப்பட்ட இரு பிரித்தானிய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை விளாடிமிர் புடினை கண்டிப்பாக பழிவாங்கும் என கூறப்படுகிறது.
உக்ரைனில் நிராயுதபாணியாக நின்ற பிரித்தானிய வீரர்கள் இருவரை ரஷ்ய துருப்புகள் கைது செய்தனர். அதில் 28 வயதான ஐடன் அஸ்லின் என்பவருக்கு அதிகாரத்தை கைப்பற்ற வன்முறையில் ஈடுபட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பிரித்தானியர், 48 வயதான ஷான் பின்னர் மற்றும் மொராக்கோ நாட்டவர் சவுதுன் பிராஹிம் ஆகிய இருவருக்கும் கூலிப்படையாக செயல்பட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், சிரியாவில் ஐடன் அஸ்லினை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், தற்போது ரஷ்யா விதித்துள்ள தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பிரித்தானிய வீரர்கள் மீது புடினின் இந்த தீர்ப்பு கோபமூட்டும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் கண்டிப்பாக இந்த தீர்ப்பை ஏற்காது என குறிப்பிட்டுள்ள அவர், இன்னொரு நாட்டை வலுக்கட்டாயமாக போருக்கு தூண்டும் செயல் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வீரர்கள் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில், ரஷ்யாவின் தீர்ப்பு இதுவாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் செல்லும் என தாம் நம்பவில்லை எனவும், அவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றே தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த தண்டனைத் தீர்ப்புக்கு சட்டபூர்வமான தன்மை இல்லை என்றும், வீரர்கள் இருவரையும் போர்க் கைதிகளாக கருத வேண்டும் என்றும் போரிஸ் ஜோன்சன் அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், ரஷ்யா சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Bob Seely குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் தண்டனை துரிதமாக நிறைவேறாது என்றே நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரு பிரித்தானியர்களையும் மீட்க அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவுறுத்தியுள்ளார்.