பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம்
ஈராக்கின் ஏர்பில் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரித்தானிய ராணுவ தளம் மீது தாக்குதல்
வடக்கு ஈராக்கின் ஏர்பில்(Erbil) பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய ராணுவ தளம் மீது இரவு நேர ஒருங்கிணைக்கப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மார்ச் 11ம் திகதி இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரானுடன் தொடர்புடைய அமைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்காக அனுப்பப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்து விட்டதாகவும், ஆனால் சில ட்ரோன்கள் இலக்கை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானிய வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் சில அமெரிக்க வீரர்கள் இதில் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களும் உயிருக்கு ஆபத்தானதாக இல்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னணியில் ரஷ்யாவின் சதியா?
ஏர்பில் மற்றும் பாக்தாக் என இரண்டு பகுதியில் ஒரே நேரத்தில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருப்பது எதிரிகளின் தாக்குதல் முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்டுவதாக பிரிகேடியர் கை ஃபோடன்(Guy Foden) தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் ஆதரவு குழுவின் இந்த தாக்குதல் உத்திக்கு பின்னால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மறைமுக செயல்பாடு இருக்கலாம் என்று பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடன் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா மறைமுகமாக தொழில்நுட்ப உதவிகளை செய்து வருவதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL ல் இணையுங்கள். |