60மீ உயரத்தில் இருந்து விழுந்த பிரித்தானிய மலை ஏறுபவர்: உடலை மீட்ட அதிகாரிகள்
British Mountaineer fall from 60 Meter and dead: ஸ்பெயினின் 28 வயது பிரித்தானிய மலையேறுபவர் சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய மலையேறுபவர் உயிரிழப்பு
வடக்கு ஸ்பெயினின் காண்டாபிரியன் மலைத் தொடரின் மிக உயரமான சிகரமான டோர்செரெடோவின்(Torrecerredo) 60 மீட்டர் உயரத்தில் இருந்து 28 வயது பிரித்தானிய மலையேறுபவர் ஒருவர் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் சிவில் அதிகாரிகள் வழங்கிய தகவலில், பிரித்தானிய மலையேறுபவர் சிகரத்தின் செங்குத்தான பள்ளத்தில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் விபத்து தொடர்பான தகவல் மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் இரண்டு சிறப்பு நிபுணர்களை பள்ளத்தாக்கின் கீழ் இறக்கி உயிரிழந்த மலையேறியின் உடலையும் சில பொருட்களையும் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த பிரித்தானியரின் அடையாளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

மீட்கப்பட்ட உடல் தற்போது கிகோன் நகருக்கு அருகில் உள்ள லா மோர்கல் விளையாட்டு மற்றும் விமானப் போக்குவரத்து மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாக பிரித்தானிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.