ரஷ்ய ட்ரோன்களில் பிரித்தானிய உதிரி பாகங்கள்: அம்பலப்படுத்திய உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் மீது ஞாயிறன்று நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன்களில் பிரித்தானியாவின் உதிரி பாகங்கள் காணப்பட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உதிரி பாகங்கள்
பிரித்தானிய மைக்ரோ கம்ப்யூட்டர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு உதிரி பாகங்கள் அந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், வலுவான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், DBT எனப்படும் வணிகம் மற்றும் வர்த்தகத் துறை தெரிவிக்கையில், ரஷ்யாவின் இராணுவத்திற்கான விநியோகத்தில் தொடர்ந்து நுழைந்து வரும் இங்கிலாந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை முடக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கம் தரப்பில் இருந்தும், ரஷ்ய ஆயுதங்களில் பிரித்தானியா தயாரிப்பு உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், உக்ரைன் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்த ஒவ்வொரு போர்க்களப் பொருளும் உட்பட ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயிரக்கணக்கான பொருட்களை அரசாங்கம் தடை செய்துள்ளது என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தடை விதிக்கப்பட்ட
மட்டுமின்றி, தடைகளுக்கு இணங்காத எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ பெரிய நிதி அபராதங்கள் அல்லது குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உடனான பிரித்தானியாவின் சுமார் 20 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வர்த்தகங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சீனா, தைவான் மற்றும் நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களும் ரஷ்ய ஆயுதங்களில் காணப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, உலகிலேயே மிகவும் தடை விதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
இருப்பினும், சரிவைத் தவிர்க்க அதன் பொருளாதாரம் மற்றும் உற்பத்தியை அது மாற்றியமைத்துள்ளது, இதன் விளைவாக இராணுவச் செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் கொள்முதல் அளவைக் குறைத்த பின்னர், சீனா மற்றும் இந்தியாவால் அதை ஈடு செய்ய களம் அமைத்துக்கொண்டது. இதனால், பொருளாதார வளர்ச்சியை ரஷ்யா பாதுகாத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |