வெளிநாட்டில் மூழ்கும் படகில் பிரித்தானியர் சடலமாக மீட்பு: இறுகும் மர்மம்
கிரேக்க தீவு ஒன்றில் மூழ்கும் படகில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிரித்தானியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேக்க தீவான சானியாவுக்கு அருகிலுள்ள சவுடா துறைமுகப் பகுதியில், மூழ்கிய நிலையில் காணப்பட்ட படகில் இருந்து 70 வயதான பிரித்தானியரை சடலமாக மீட்டுள்ளனர்.
குறித்த நபரின் உடல் மீட்கப்பட்ட பின்னர் இந்த மர்ம மரணம் தொடர்பில் கிரேக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vlite பகுதியில் மூழ்கிய கப்பலை மீனவர்கள் கண்டுபிடித்ததை அடுத்து கிரேக்க கடலோர காவல்படை மற்றும் சவுடா துறைமுக ஆணையம் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உடற்கூராய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் சானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உள்ளூர் ஊடகம் வெளியிட்ட தகவலின் படி, தமது மனைவி இறந்த பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக அந்த பிரித்தானியர் குறித்த படகிலேயே வசித்து வந்துள்ளார்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது படகில் மர்ம கும்பல் கொள்ளையிட்டு சென்றதாகவும், அவரது கால்கள் படகுடன் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
படகில் இருந்து மீட்கப்பட்ட அவரது வளர்ப்பு நாயை, தற்போது காப்பகத்தில் அனுமதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.