இஸ்ரேலுக்கு உதவ... காஸா மீது இன்னமும் பறக்கும் பிரித்தானியாவின் உளவு விமானங்கள்
ஹமாஸ் படைகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு, இஸ்ரேல் அரசாங்கத்திற்கு உதவ பிரித்தானிய உளவு விமானங்கள் காஸா மீது தொடர்ந்து பறந்து வருகிறது.
பிரித்தானியாவின் Shadow R1s
வெளியான தகவலின் அடிப்படையில், மத்திய கிழக்கில் அமைந்துள்ள பிரித்தானிய விமானப்படை தளங்களில் இருந்தே உளவு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த 2023 அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகளால் பிடிக்கப்பட்டவர்களின் நடமாட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்து, இஸ்ரேல் இராணுவமான IDF-க்கு அனுப்பப்படுகிறது.
ஹமாஸ் படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து, பிரித்தானியா இஸ்ரேலுக்கு உதவ சிறப்பு விமானங்களை அனுப்பியுள்ளது. பிரித்தானியாவின் Shadow R1s என்ற சிறப்பு உளவு விமானம், கிட்டத்தட்ட தினமும் காஸா மீது பறக்கவிடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் அது எந்த விமானம் என்பதை வெளியிட மறுத்தாலும், திரட்டப்பட்ட தரவுகளில் இருந்து அது Shadow R1s என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், வெறும் தரவுகளை சேகரிப்பது மட்டுமே தங்களின் பணி என்றும் Shadow R1s விமானம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகள் பணயக்கைதிகளைக் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
முன்னாள் மேஜர் ஜெனரல் சார்லி ஹெர்பர்ட் தெரிவிக்கையில், திரட்டப்படும் தரவுகள் அனைத்தும் ஹமாஸ் படைகள் மற்றும் பலரை குறிவைக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான பிரதமர் ஸ்டார்மரின் நிபந்தனையுடன் கூடிய உறுதிமொழி வெளியான நிலையிலேயே, பிரித்தானிய உளவு விமானம் குறித்த தகவலும் கசிந்துள்ளது.
இஸ்ரேல் தளபதிக்கு கெடு
மட்டுமின்றி, பிரித்தானிய அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் காஸா மீது இஸ்ரேல் அரசாங்கத்தின் கொடூரங்களை வெளிப்படையாகவும் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர்.
பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிப்பது என்பது ஹமாஸ் படைகளுக்கு உதவும் செயல் என்றே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்தாக உள்ளது. இதனிடையே, காஸா மொத்தமும் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு இராணுவம் தயாராக வேண்டும் என்று நெதன்யாகு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதில் இருவேறு கருத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. காஸாவை கைப்பற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாவிட்டால் பொறுப்பில் இருந்து விலகவும் தளபதி Eyal Zamir-க்கு இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கெடு விதித்துள்ளது.
காஸாவை மொத்தமாக கைப்பற்றுவது தான் தமது அடுத்த இலக்கு என்று பிரதமர் நெதன்யாகு தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். காஸா பகுதியின் 75 சதவீதத்தை தற்போது இஸ்ரேல் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், மொத்தமாக கைப்பற்றுவதே நெதன்யாகுவின் திட்டமாக உள்ளது.
ஆனால் காஸாவை மொத்தமாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |