புடின் விடுத்த மிரட்டல்... ரகசிய ரஷ்யப் பகுதியைக் கண்காணிக்கும் பிரித்தானிய உளவு விமானங்கள்
British spy planes were deployed on extraordinary month-long mission: பிரித்தானிய உளவு விமானங்கள் ஒரு மாத கால அசாதாரணப் பணி ஒன்றிற்காக ஈடுபடுத்தப்பட்டன.
விளாடிமிர் புடின் ஐரோப்பா மீது அணுகுண்டு வீசுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யாவைக் கண்காணிப்பதற்காக பிரித்தானிய உளவு விமானங்கள் ஒரு அசாதாரணமான ஒரு மாத காலப் பணியை மேற்கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
17 முறை
ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, RAF தளபதிகள் அக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவின் செயல்பாட்டில் உள்ள இரண்டு ரிவெட் ஜாயின்ட் கண்காணிப்பு விமானங்களை 17 முறை அனுப்பியுள்ளனர்.

மிகவும் நவீனமான அந்த உளவு விமானங்கள், போலந்து, லிதுவேனியா மற்றும் பால்டிக் கடலுக்கு இடையே அமைந்துள்ள, ரஷ்யாவின் ரகசிய ராணுவத் தனிப்பகுதியான கலினின்கிராடை தொடர்ச்சியாக கண்காணித்துள்ளது.
ரகசிய வானொலி மற்றும் மின்னணு சமிக்ஞைகளைக் கண்டறியும் வகையில் கட்டமைக்கப்பட்ட அந்த உளவு விமானங்கள், நேட்டோ அமைப்பின் பால்டிக் எல்லைப் பகுதிகளில், ரஷ்யா மற்றும் பெலாரஸிற்கு அருகாமையில், தொடர்ச்சியான ரோந்துப் பணிகளை மேற்கொண்டன.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேளையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த மாதம், ஐரோப்பாவைத் தாக்குவதற்குத் தனது கையிருப்பில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயார் என்று அச்சுறுத்தும் வகையில் அறிவித்ததோடு, தனது படைகள் போருக்கு தயார் நிலையிலுள்ளன என்றும் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில், மே மாதத்தில் நான்கு முறை மட்டுமே உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) அக்டோபரில் அந்த எண்ணிக்கையை நான்கு மடங்காக உயர்த்தியது.
அந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்னவென்பது வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், ரஷ்ய அச்சுறுத்தலின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக, ரஷ்யாவின் தகவல் தொடர்பு மற்றும் சமிக்ஞைத் தரவுகளை அந்த உளவு விமானங்கள் திரட்டக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தயாராக இருக்கும்
மேற்கத்தியக் கூட்டணி அந்தத் தனித்து அமைந்த ரஷ்யப் பகுதியைத் துண்டிக்க முயன்றால், அதன் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா நேட்டோவிடம் எச்சரித்த சிறிது காலத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேட்டோ நாடுகள் கலினின்கிராட் பகுதியை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில், தனது பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்காக, அணு ஆயுதங்கள் உட்படத் தவசமயம் கையிருப்பிலுள்ள அனைத்து வகையான படைகளையும் திறன்களையும் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்கும் என்று செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவின் அணு ஆயுத மிரட்டல்களை நிராகரித்த நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே, நேட்டோவிற்கு எதிராக தன்னால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பது புடினுக்குத் தெரியும், எனவே நான் இதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால், தான் போருக்குத் தயாராக இருப்பதாகவும், நிலைமை எல்லை மீறிச் சென்றால், இறுதியில் வெற்றி பெற்றவர் என்று எவருமே இருக்க மாட்டார்கள் என்றும் புடின் பின்னர் கூறினார். இதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கலினின்கிராட், ரிவெட் ஜாயின்ட்ஸ் உளவு விமானங்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், ஆனால் அக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் வழக்கத்திற்கு மாறாகத் தோன்றியதாகவும் அவர்கள் கூறியுள்ளர்.

ரஷ்யாவிற்கு மேற்கே சுமார் 250 மைல் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி, கடந்த சில வாரங்களாக மாஸ்கோவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
இது ரஷ்ய கடற்படையின் பால்டிக் கப்பற்படையின் தளமாகும். மேலும், இங்கு அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இஸ்கந்தர்-எம் ஏவுகணைகளும், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா அங்கு தனது அதிநவீன ரேடார் ஒன்றின் கட்டுமானப் பணிகளையும் நிறைவு செய்து வருகிறது. போலந்து எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் உள்ள குவார்டெய்ஸ்க் (Gvardeysk) பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரம்மாண்டமான கட்டமைப்பில், தலா 1,640 அடி நீளம் கொண்ட மூன்று பிரம்மாண்டமான ஆண்டெனா வரிசைகள் உள்ளன.
இந்தப் புதிய தளம், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து ஏவுகணைகளையும் விமானங்களையும் கண்டறியவும், அதே நேரத்தில் தொடுவானத்திற்கு அப்பால் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடலில் உள்ள போர்க்கப்பல்களைக் கண்டறியவும் ரஷ்யாவிவிற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.