பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா
இந்திய மாகாணம் ஒன்றின் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஸ்டிக்கர்களை ஒட்டிய ஒரு பிரித்தானிய தம்பதி இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
உளவுத்துறைக்குத் தகவல்
குறித்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாகாணத்தில் அஜ்மீர் பகுதியிலேயே நடந்துள்ளது. இதனையடுத்து புலனாய்வுத் துறை இந்த விடயத்தை தீவிரமாகக் கருதி மாவட்டக் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தது.
அதன் பிறகு அந்த இரண்டு பிரித்தானியர்களும் விசாரிக்கப்பட்டனர். லூயிஸ் கேப்ரியல் என்பவர் தனது காதலி அனுஷி எம்மா கிறிஸ்டினுடன் சுற்றுலா விசாவில் இந்தியா வந்து புஷ்கரில் தங்கியிருந்தார்.

ஜனவரி 21 அன்று, அந்தத் தம்பதி ஸ்டிக்கர் ஒட்டும் செயலில் ஈடுபட்டிருந்ததாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து புலனாய்வுத் துறை சிசிடிவி பதிவுகளையும் உள்ளூர் தகவல்களையும் ஆய்வு செய்து சந்தேக நபர்களை அடையாளம் கண்டது.
மேலும், இந்த விவகாரம் தீவிரத்தன்மைகொண்டது என்று உளவுத்துறை கருதியதைத் தொடர்ந்து, மாவட்டக் காவல்துறை இதில் ஈடுபட்டது. அதன்பிறகு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சிஐடி) ராஜேஷ் மீனா தலைமையிலான ஒரு குழுவினரால் அந்த இருவரும் விசாரிக்கப்பட்டனர்.
நாட்டை விட்டு வெளியேற
விசாரணையில், அவர்கள் சுற்றுலா விசாக்களில் இருந்தபோதே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்தது, இது விசா நிபந்தனைகளை மீறும் செயலாகும்.
மாவட்ட காவல்துறையின் உதவியுடன் அந்த ஸ்டிக்கர்கள் பின்னர் அகற்றப்பட்டன. தொடர்ந்து, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த இரண்டு பிரித்தானியரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தி, இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பும் வழங்கப்பட்டது.
இத்தகைய சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்படுவதையும், நாடு கடத்தும் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
சுற்றுலா விசாவில் நாட்டில் இருக்கும்போது, எந்தவிதமான அரசியல், போராட்ட அல்லது சித்தாந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |