பிரித்தானிய பெண்ணும் மகள்களும் கொல்லப்பட்ட சம்பவம்: குற்றவாளி தொடர்பில் வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்
தான் கொல்லப்பட்டாலும் உறுப்பு தானம் மூலம் ஐந்து உயிர்களை வாழவைத்த பெண் மற்றும் அவரது மகள்களைக் கொன்ற நபர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
சுற்றுலா சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த பயங்கரம்
இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய இஸ்ரேலியர்களான Lucy Dee (48)ம், அவரது மகள்களில் Maia (20) மற்றும் Rina (15) ஆகியோரும் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
அவர்கள் சென்ற கார் மீது, பாலஸ்தீனிய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் திடீரென கண்மூடித்தனமாக சுட்டதில், Maia, மற்றும் Rina ஆகிய இருவரும் உடனடியாக கொல்லப்பட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Lucy பின்னர் உயிரிழந்தார்.
Lucy மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் பிழைக்க வாய்ப்பில்லை என தெரியவந்ததும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
Pic: @LtColRichard
Lucyயின் இதயம் Lital Valenci (51) என்ற பெண்ணுக்கும், அவரது நுரையீரல்கள் 58 வயது பெண் ஒருவருக்கும், கல்லீரல் 25 வயது ஆண் ஒருவருக்கும், அவரது சிறுநீரகங்கள், முறையே 58 மற்றும் 39 வயதுடைய ஆண்கள் இருவருக்கும் பொருத்தப்பட்டுள்ளன. ஆக, இறந்தும் 5 பேரை வாழவைத்துள்ளார் Lucy.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், Lucy மற்றும் அவரது மகள்களான Maia மற்றும் Rinaவைக் கொன்ற பாலஸ்தீனிய நாட்டவர்கள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தற்போது தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை, பாலஸ்தீனத்திலுள்ள Nablus என்ற நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு இராணுவ வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அங்கு பதுங்கியிருந்த Hassan Katnani, Maed Mitsri மற்றும் Ibrahim Hura என்பவர்கள் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் அந்த மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில், Lucy மற்றும் அவரது மகள்களான Maia மற்றும் Rinaவைக் கொன்றவர்கள், தீவிரவாத அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்களான Hassan Katnani மற்றும் Maed Mitsri என தெரியவந்துள்ளது.
இராணுவத்துக்கும் அந்த கொலையாளிகளுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் Hassan மற்றும் Maedம், அவர்களுக்கு உதவிய Ibrahim Hura என்னும் நபரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
Lucy மற்றும் அவரது மகள்களான Maia மற்றும் Rinaவைக் கொன்றவர்கள், கொலை செய்த ஒரு மாதத்திற்குள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.