எரித்துக் கொல்லப்பட்ட கணவன்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய பெண்
தமது கணவரைக் கொலை செய்ய உத்தரவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை கைதியாக இருந்த ஒவ்வொரு நாளும் பொலிசார் தம்மை கொடூரமாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வார காலம் சிறையில் இருந்தேன், ஒவ்வொரு நாளும் நரகமாகவே இருந்தது என குறிப்பிட்டுள்ளார் 64 வயதான யாஸ்மின் கௌசர். மட்டுமின்றி, தாம் செய்யாத குற்றத்திற்காக அவர்கள் தம்மிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயன்றார்கள் எனவும் யாஸ்மின் கௌசர் தெரிவித்துள்ளார்.
பிராட்ஃபோர்ட் பகுதியை சேர்ந்த யாஸ்மின் கௌசர் கடந்த ஏப்ரல் 4 ம் திகதி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து ஜூன் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். 65 வயதான முகமது பாரூக் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவியான யாஸ்மின் கௌசர் கைது செய்யப்பட்டார்.
இவர்களது குடும்பத்திற்காக பணியாற்றி வந்த 23 வயது இளைஞரே முகமது பாரூக்கை கொலை செய்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். ஆனால், அந்த இளைஞரை கொலை செய்ய தூண்டியது யாஸ்மின் கௌசர் என பொலிஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.
பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணியாற்றி வந்துள்ளார் கொல்லப்பட்ட முகமது பாரூக். அவரது இளைய சகோதரரின் மறைவுக்கு பின்னர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார் பாரூக், இதனையடுத்து யாஸ்மின் கௌசரும் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 1ம் திகதி இஸ்லாமாபாத் அருகாமையில் வாகனத்துடன் எரிந்த நிலையில் முகமது பாரூக்கின் சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், பாரூக் தமது குடும்ப வீட்டில் வைத்தே கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் 27 மைல்கள் தொலைவுக்கு சடலத்தை கொண்டு சென்ற கொலைகாரன், அவரது உடலை காருடன் தீக்கிரையாக்கியதாக பொலிசார் நம்புகின்றனர்.
பாரூக்கை கொலை செய்ததாக கூறப்படும் 23 வயது அப்துல் வஹீத் என்ற இளைஞருடன் கெளசருக்கு முறை தவறிய உறவு இருந்திருக்கலாம் எனவும் பொலிசார் கருதுகின்றனர். மட்டுமின்றி, இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரித்தானியாவுக்கு செல்லவும் திட்டமிட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்த கொலை வழக்கில் அப்துல் வஹீதுக்கு உதவியதாக கூறப்படும் 24 வயது அப்துல் இத்ரீஸ் என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களது தாயாரை பாகிஸ்தான் பொலிசார் சிக்க வைத்துள்ளதாக அவரது பிள்ளைகள் கூறுகின்றனர்.
தொழிலதிபரான பாரூக் 1.5 மில்லியன் பவுண்டுகள் பெருமதியான சொகுசு இல்லத்தில் வாழ்ந்து வரும்போது, தங்களின் தாயார் நகரின் இன்னொரு பகுதியில் வெறும் 180,000 பவுண்டுகள் பெருமதியான வீட்டில் தமது மகளுடன் வசித்து வந்துள்ளார் என பிள்ளைகள் கூறுகின்றனர்.