6 மாத குழந்தைக்கு போதைப்பொருள் பாதிப்பு: ஸ்பெயினில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தம்பதி
ஸ்பெயினில் குழந்தைகளை தனியாக தவிக்க விட்டுவிட்டு விருந்துக்கு சென்ற பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு விருந்துக்கு சென்ற தம்பதி
ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல்(Costa del sol) பகுதியில் உள்ள ஹோலிடே வேர்ல்ட் ரிசார்ட்டில்(Holiday world Resort) 41 வயதுடைய ஆண் மற்றும் 28 வயதுடைய பெண் ஆகிய இருவரும் 3 குழந்தைகளுடன் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் 4 வயது, 2 வயது மற்றும் 6 மாத குழந்தை என மூன்று பேர் ஆபத்தான மற்றும் கவலையளிக்கும் விதமாக தனியாக தவிக்க விடப்பட்டிருந்தனர்.

மேலும், அவர்கள் இருந்த ஹோட்டல் அறை மிகுந்த குழப்பமாக இருந்ததுடன், அங்கிருந்த மூத்த குழந்தை மற்ற இருவரையும் கவனித்து கொள்ளும் கட்டாயத்தில் இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலில், 6 மாத குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில் அந்த குழந்தை கொக்கைன் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தகவலை எந்தவொரு காவல்துறை அதிகாரிகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் தம்பதி கைது
ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்ட 3 குழந்தைகளும் தற்போது அந்தூசியா மாகாண அரசின் சமூக நலத்துறையின் தற்காலிகப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மூன்று குழந்தைகளும் மருத்துவ பரிசோதனைக்காக Materno Infantil மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் குழந்தையை கைவிட்டு விட்டு சென்ற குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டு இருப்பதாக ஸ்பெயின் தேசிய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |