மருகளின் பட்டங்களைப் பறித்த மன்னர் ஒருவர்
புரூனே நாட்டின் சுல்தான், தன் மருமகளின் பட்டங்களைப் பறித்ததைத் தொடர்ந்து, அவர் இனி ராஜ குடும்ப உறுப்பினர் அல்ல என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1980, 90களின்போது, உலகிலேயே பணக்கார நபர் என கருதப்பட்டவர் புரூனே நாட்டின் சுல்தானான ஹசனல் போல்கியா (Hassanal Bolkiah, 80).

மருமகளின் பட்டங்கள் பறிப்பு
புரூனே சுல்தானான போல்கியா, தனது மகனான இளவரசர் அப்துல் மாலிக்கின் மனைவியான பெங்கிரான் ராபி அதுல் அதவ்வியாவின் (Pengiran Raabi'atul Adawiyyah) பட்டங்களை பறித்துள்ளதாக அரண்மனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு புரூனே சுல்தானான போல்கியாவின் மகன் அப்துல் மாலிக்கை திருமணம் செய்ததன் மூலம் ராஜ குடும்பத்துக்குள் காலடி எடுத்துவைத்தார் அதவ்வியா.
ஆனால், அவர் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரின் மனைவியைப் போல நடந்துகொள்வதில்லை என்றும், மன்னராட்சியின் நற்பெயருக்கு அவமதிப்பைக் கொண்டுவரும் வகையில் நடந்துகொண்டதாகவும், சுல்தானை மதிப்பதில்லை என்றும், ஆகவே, அவரது பட்டங்கள் பறிக்கப்படுவதாகவும் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரூனே சுல்தானான போல்கியா, நாட்டின் முழுமையான முடியாட்சியாளராக இருப்பது மட்டுமின்றி, புரூனேயின் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், வெளியுறவு, நிதி அமைச்சராகவும் இருப்பதுடன், நாட்டின் காவல் படையையும் அவர் கட்டுப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |