லண்டன் மேயர் பெயரில் கொலைப்பட்டியல்: 10 பேர்களை சுட்டுக்கொன்ற அமெரிக்க இளைஞர்
அமெரிக்காவில் அங்காடி ஒன்றில் கொலைவெறி தாக்குதல் முன்னெடுத்த இனவாதி இளைஞரின் கொலைப்பட்டியலில் லண்டன் மேயர் சாதிக் கான் பெயரும் இடம்பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பஃபேலோ பகுதியில் கடை ஒன்றில் புகுந்து இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Payton Gendron என அடையாளம் காணப்பட்ட அந்த 18 வயது இளைஞர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரலை செய்துள்ளதுடன், 13 பேர்களை குறிவைத்து தாக்கியதில் 11 பேர்கள் கருப்பின மக்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும், கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்படுவதன் முன்னர் குறித்த இளைஞர் 180 பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ஆபிரிக்க அமெரிக்கர்களையும் யூதர்களையும் கொன்று தள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பிரித்தானியா தொடர்பில் பலமுறை குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், தமது அறிக்கையின் 165வது பக்கத்தில், லண்டன் மேயர் சாதிக் கான் உட்பட மூவரை கொலை செய்ய வேண்டும் என கொலைப்பட்டியல் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
பிரித்தானியாவில் ஊடுருவிய பாகிஸ்தானியர் என இழிவான வார்த்தைகளால் மேயர் சாதிக் கானை அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரத்தில் அமெரிக்கா சென்றிருந்த சாதிக் கான், மொத்தம் 5 நாட்கள் அங்கே தங்கியிருந்துள்ளார்.
லண்டனின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மேயர் சாதிக் கான் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் விஜயம் செய்தார் என்றே தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை பஃபேலோ பகுதியில் அமைந்துள்ள Tops கடையின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூட்டை முன்னெடுத்த Payton Gendron மூவரை கொன்றுள்ளதுடன், நாலாவது நபர் காயங்களுடன் தப்பினார்.
தொடர்ந்து துப்பாக்கியுடன் கடைக்குள் புகுந்த அந்த இளைஞர் சரமாரியாக சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர் என்றே தெரியவந்துள்ளது.