ஐரோப்பிய நாடொன்றில் வெடித்த GEN Z போராட்டம் - பிரதமர் ராஜினாமா
அரசுக்கெதிரான மக்கள் போராட்டதையடுத்து, பல்கேரியா அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில்(bulgaria) கடந்த ஜனவரி முதல் பிரதமர் ரோசன் ஜெலியாஸ்கோவ்(Rosen Zhelyazkov) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
பல்கேரியாவில் ஆட்சி கவிழ்ப்பு
இந்நிலையில், அரசாங்கத்தின் அதிக வரிகள், தேசிய நாணயமான லெவிலிருந்து யூரோவிற்கு மாறுவது, அதிகரித்த சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் மற்றும் செலவின அதிகரிப்புகளுக்கான பட்ஜெட் திட்டங்களால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த வாரம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து, வரி மற்றும் சமூக பங்களிப்பு அதிகரிப்புகளை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கும் புதிய வரைவு பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருந்தபோதிலும், நேற்று இந்த போராட்டம் தீவிரமடைந்து GEN Z எனப்படும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட 1,50,000 பேர் பாராளுமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரோசன் ஜெலியாஸ்கோவ் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கும் முன்னர், பிரதமர் ரோசன் ஜெலியாஸ்கோவ் தனது அமைச்சரவை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரோசன் ஜெலியாஸ்கோவ், "தேசிய சட்டமன்றத்தின் முடிவுகள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் போது அர்த்தமுள்ளதாக இருக்கும். சமூகம் எங்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதோ அங்கு நாங்கள் இருக்க விரும்புகிறோம்." என கூறியுள்ளார்.
பல்கேரியா, ஜனவரி 1 ஆம் தேதி முதல் அதன் தேசிய நாணயமான லெவிலிருந்து யூரோவிற்கு மாறி, யூரோ மண்டலத்தின் 21வது உறுப்பினராக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |