159 ஓட்டங்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா - சாதனைகளை படைத்த பும்ரா
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றி பும்ரா புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
பும்ராவிடம் சுருண்ட தென் ஆப்பிரிக்கா
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
ஆனால் பும்ராவின் பந்துவீச்சிற்கு ஈடு கொடுக்க முடியாமல், விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.
தென் ஆப்பிரிக்கா அணி, 55 ஓவர்களில் 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஏய்டன் மார்க்கரம், 31 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய வீரர் பும்ரா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 37 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஜெய்ஸ்வால் 12 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 13 ஓட்டங்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
பும்ராவின் சாதனைகள்
இதில், பும்ரா 3 புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இதில், ரியான் ரிக்கெல்டனை போல்டு மூலம் ஆட்டமிழக்க செய்த பும்ரா, இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 152வது போல்ட் விக்கெட்டை எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போல்ட் விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் 151 போல்டுகளுடன் 3வது இடத்தில் இருந்த அஷ்வினை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்த பட்டியலில், 186 போல்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்திலும், 167 போல்டுகளுடன் கபில் தேவ் 2வது இடத்திலும் உள்ளனர்.
மேலும், இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் எடுத்ததன் மூலம், பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16வது 5 விக்கெட்டை எடுத்துள்ளார்.

அதேவேளையில், SENA நாடுகளுக்கு எதிராக அதிக 5 விக்கெட்(13) எடுத்த ஆசிய வேகப்பந்து வீச்சாளார் என்ற சாதனையை படைத்துள்ளார்.
12 5 விக்கெட்களுடன் வாசிம் அக்ரம் 2வது இடத்திலும், 11 5 விக்கெட்களுடன் கபில் தேவ் 3வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், இந்தியாவில் 17 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
முன்னதாக 2008ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், முதல் நாளிலே 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |