இயக்குநர் சேரன் மீது பொலிஸில் புகார்
சாலையில் தனியார் பேருந்து இயக்குநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இயக்குநர் சேரன் மீது பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேரன் வாக்குவாதம்
கடந்த 13 -ம் திகதி காலை 11.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்துக்கு முன்னால் இயக்குநர் சேரன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் அதிக நெரிசல் இருப்பதால் தனியார் ஓட்டுநர் அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்துக்கொண்டே வந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த சேரன் காரை விட்டு இறங்கி நடுரோட்டில் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவரிடம், சாலையில் ஒதுங்குவதற்கு வழி இல்லாத நிலையில் அதிகமாக ஹாரனை எழுப்பக் கூடாது என்று வாக்குவாதம் செய்தார்.
அப்போது ஓட்டுநரும் அவரிடம் பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்ததால் சேரனுக்கு கோபம் வந்தது. உடனே, ஒதுங்குவதற்கும் இடமில்லாத இடத்தில் சக வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடலூரில் இயக்குநர் சேரன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், நடுவழியில் இயக்குநர் சேரன் தகராறு செய்தது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |