26 குழந்தைகளுடன் பேருந்தை கடத்தி உயிருடன் புதைத்த கொடூரன்: திடுக்கிட வைக்கும் பின்னணி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 26 சிறார்களுடன் பேருந்தை கடத்திச் சென்று, உயிருடன் மொத்தமாக புதைத்த கொடூரனுக்கு பரோல் அளிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா சிறையில் கடந்த 45 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே குறித்த நபருக்கு தற்போது பரோல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 70 வயதாகும் Frederick Newhall Woods என்பவர் தமது நண்பர்கள் இருவருடன் இணைந்து குறித்த கொடுஞ்செயலை முன்னெடுத்துள்ளார். 5 முதல் 14 வயதுடைய 26 குழந்தைகள் மற்றும் சாரதி ஒருவருடன் பேருந்தை கடத்திச் சென்றுள்ளது இந்த மூவர் கும்பல்.
தொடர்ந்து வூட்ஸின் தந்தைக்கு சொந்தமான குவாரி ஒன்றில், பேருந்துடன் 27 பேர்களையும் மொத்தமாக உயிருடன் புதைத்துள்ளது இந்த மூவர் கும்பல். பின்னர் அவர்கள் கல்வி வாரியத்திடம் இருந்து $5 மில்லியன் டொலர் தொகை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கடத்தல் சம்பவமாக கருதப்படும் இது, அந்த காலகட்டத்தில் வெளியான திரைப்படம் ஒன்றால் ஈரக்கப்பட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த மூவர் கும்பல் தூக்கத்தில் இருந்த நேரம், அந்த பேருந்து சாரதியும் 26 சிறார்களும் 16 மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு, புதைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியில் இருந்து தப்பித்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் பரோல் இல்லாமல் 27 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டது. 1976ல் நடந்த இச்சம்பவத்தில் தண்டனை பெற்றுள்ள Richard Schoenfeld என்பவருக்கு 2012ல் பரோல் வழங்கப்பட்டது, இவரது சகோதரர் ஜேம்ஸ் என்பவருக்கு 2015ல் பரோல் அளிக்கப்பட்டது.
மூவருமே வசதிபடைத்த சான் பிரான்சிஸ்கோ குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். குறித்த கடத்தல் சம்பவத்தில் சிக்கிய குழந்தைகளில் சிலர், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாங்கள் இன்னும் அனுபவிக்கும் அச்சம் மற்றும் மனக்குழப்பம் குறித்து ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதுவரை 18 முறை பரோலுக்கு முயன்று இறுதியில், கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.