ஏரியில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்! கரையில் உயிருக்கு போராடிய தந்தை: கண்கலங்க வைக்கும் சம்பவம்
தமிழகத்தில் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட முயன்ற வியாபாரி கவலைக்கிடமான நிலையில், மனை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் நேற்று முன்தினம் மாலை சடலம் ஒன்று மிதப்பதாக செங்குன்றம் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அங்கு சென்று பார்த்த போது, அது பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது.
அதன் அருகே முதியவர் ஒருவர் ஏரிக்கரையை பிடித்தபடி மயங்கி கிடப்பதையும் பொலிசார் பார்த்துள்ளனர்.
உடனடியாக விரைந்து செயல்பட்ட பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர், அப்பெண்ணின் சடலத்தையும், முதியவரையும் பத்திரமாக மீட்டனர்.
மயங்கி கிடந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரித்தபோது, அவர், சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் சிவகுமார் (50) என்பதும் தெரியவந்துள்ளது. இவர் அம்பத்தூர் பகுதியில் நிதி நிறுவனம் மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு லதா (45) என்ற மனைவியும், ரேஷ்மா(18), மோகன்(16) என மகளும், மகனும் இருப்பதும் தெரிய வந்தது. ரேஷ்மா, அண்ணாநகரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் சிவகுமார் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இதனால் குடும்பத்துடன் விஷமருந்தி, புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன், பொங்கலுக்கு துணிகள் எடுக்க போவதாக மோகனிடம் கூறிவிட்டு, லதா, ரேஷ்மா ஆகியோருடன் புழல் ஏரிக்கு சிவகுமார் வந்தார்.
அங்கு, தயாராக கொண்டு வந்த விஷத்தை 3 பேரும் குடித்துவிட்டு, ஏரியில் குதித்தனர். இதில் லதா, ரேஷ்மா ஆகியோர் ஏரியில் மூழ்கி சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகுமார் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர்களில் லதாவின் உடலை கடந்த 13-ஆம் திகதி மாலையும், ரேஷ்மாவின் உடலை நேற்று முன் தினமும் பொலிசார் மீட்டனர்.
இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
