பிரித்தானியாவில் பாதாள சாக்கடைக்குள் பதுங்கிய திருடன்: வரவழைக்கப்பட்ட ராயட் மோப்ப நாய்
பிரித்தானியாவில் பாதாள சாக்கடைக்குள் பதுங்கி இருந்த கேபிள் திருடன் மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சார கேபிள் திருட்டு
பர்மிங்காமின் கிரேட் சார்லஸ் குயின்ஸ்வே பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7:30 மணியளவில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் நிலத்தடி மின்சார கேபிள்களை திருடி வருவதாக பொலிஸாருக்கு பொதுமக்களிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலையடுத்து விரைந்து செயல்பட்ட வெஸ்ட் மிட்லண்ட்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அத்துடன் அவர்கள் திருடி வைத்திருந்த கேபிள்களையும் அங்கிருந்த வேன் ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூன்றாவது நபர் ஒருவர் பாதாள சாக்கடை குழியில் ஒருவர் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
பாதாள சாக்கடைக்குள் பதுங்கிய திருடன்
இதையடுத்து ராயட் என்ற சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, பூமிக்கு அடியில் பதுங்கியிருந்த திருடனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மேலே வர பூமிக்கு அடியில் பதுங்கியிருந்த திருடன் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவர் மேன்ஹோலில் இருந்து ஏணி வழியாக வெளியே வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் மேலே வந்ததும் திருட்டு சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் 37,45, மற்றும் 48 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |