கனடாவில் மனைவி, மாமனாரை கொலை செய்த கணவன்: அடுத்த நாளே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சந்தேக நபர்
கனடாவில் மனைவி மற்றும் மாமனாரை கொலை செய்ததாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி நகரத்திற்கு வெளியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இரட்டை கொலை குற்றவாளி
திங்கட்கிழமை கனடாவின் கல்கரி(Calgary) பொலிஸார், தனது மனைவி மற்றும் மாமனாரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒரு நபர் நகரத்திற்கு வெளியே சடலமாக கண்டெடுத்து இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
கல்கரி பொலிஸார், கொலை குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் 38 வயதான பெனடிக்ட் கமின்ஸ்கி ஆயுதம் ஏந்திய ஆபத்தான நபராக இருக்கலாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கையை முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் பெனடிக்ட் கமின்ஸ்கி கல்கரியிலிருந்து வடமேற்கே தோராயமாக 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட்டர் வேலி பகுதியில்(Water Valley area) தனது வாகனத்திற்கு அருகில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மனைவி, மாமனார் படுகொலை
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கல்கரியில் உள்ள வெவ்வேறு இடங்களில் 30 வயதுடைய பெண் மற்றும் 70 வயதுடைய ஆண் ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இருவரும், பெனடிக்ட் கமின்ஸ்கி-யின் மனைவி மற்றும் மாமனார் என பொலிஸார் நம்புகின்றனர்.
பொலிஸ் முக்கிய குற்றப்பிரிவின் ஆய்வாளர் Lee Wayne, கொலை நடந்த காரணம் இன்னும் விசாரணைக்குட்பட்டது என்றாலும், இந்த கொலைகள் திட்டமிட்டே நடந்தவை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சந்தேக நபரான பெனடிக்ட் கமின்ஸ்கி இதற்கு முன்னதாக எந்தவொரு குற்ற வரலாறு இல்லாத நபர் என்றாலும், அவர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்றவர் என்று தெரியவந்துள்ளது.
இறப்புகளுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் காலவரிசை தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலியானவர்களுக்கான பிரேத பரிசோதனை வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |