கலிஃபோர்னியாவில் இரசாயன கசிவு., ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள கார்டன் கிரோவ் நகரில் அமைந்துள்ள GKN Aerospace நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தில், மிக ஆபத்தான இரசாயனப் பொருள் கசிந்ததால் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அங்கு உள்ள 7,000 கேலன் அளவிலான மெத்தில் மெத்தாக்ரிலேட் (Methyl Methacrylate) என்ற எரிபொருள் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள் அடங்கிய அழுத்தக் குழாய் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த இரசாயனம் மிக எளிதில் எரியும் தன்மை கொண்டது.

Orange County Fire Authority அதிகாரிகள், “இந்த குழாய் வெடிக்க வாய்ப்பு அதிகம். அது கசிந்தாலும் ஆபத்து, வெடித்தாலும் மிகப்பெரிய ஆபத்து” என எச்சரித்துள்ளனர்.
அருகிலுள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளின் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
குழாயின் வெப்பநிலையை குறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது 16 டிகிரி செல்ஸியஸ் வரை குறைக்கப்பட்ட நிலையில், அதை 11 டிகிரி செல்ஸியஸ் வரை குறைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
அருகிலுள்ள மக்கள் 'கனமான பழச்சுவை போன்ற வாசனை' உணர்ந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிறுவனம் டிஸ்னிலாண்டுக்கு அருகில் இருந்தாலும், அது பாதிப்பு இல்லாத பகுதியில் இருப்பதால் வழக்கம்போல திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தின் தரப்பிலிருந்து, “உள்ளூர் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#CaliforniaLeak #ChemicalIncident #GardenGrove #Evacuation #ToxicLeak #OrangeCounty #LosAngeles #SafetyAlert