விபத்தில் 200 அடிக்கு சாலையை மூடிய தக்காளிகள்: கலிபோர்னியாவில் பரிதாபம்!
கலிபோர்னிய சாலையில் கொட்டிய 1,50,000 தக்காளிகள்.
உலகின் தக்காளி ஏற்றுமதியில் பாதியளவு கலிபோர்னியாவில் உற்பத்தி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 1,50,000க்கும் அதிகமான தக்காளிகள் சாலையில் கொட்டி போக்குவரத்தில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மீது தக்காளியை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி பிறகு அங்குள்ள செண்டர் மீடியனில் லொறி மீண்டும் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் கலிபோர்னியா நெடுஞ்சாலை முழுவதும் சுமார் 1,50,000 என்ற அளவிலான ஏராளமான தக்காளிகள் சிதறிக்கிடந்தன, சிதறிய தக்காளிகள் கிட்டத்தட்ட 200 அடி நீளத்திற்கு சாலையை மூடி இருந்ததால் Vacaville இல் உள்ள இன்டர்ஸ்டேட் 80 இல் போக்குவரத்து குழப்பம் ஏற்பட்டது.
— drew (@Drew_G00dy) August 29, 2022
சாலை முழுவதையும் மூடிய தக்காளிகளால், சாலைகள் சிவப்பு நிற போர்வையால் போர்த்தியது போல் காணப்பட்டது.
இவ்வாறு சாலையில் கொட்டி கிடந்த தக்காளிகள் மீது வாகனங்கள் ஏறிச் சென்றதில் தக்காளி நசுங்கியதுடன் மட்டுமில்லாமல், தக்காளிகள் மேல் ஏறிச் சென்ற 7 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இதுத் தொடர்பாக கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் கூறுகையில், மூன்று பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், நான்காவது ஒருவர் கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணிக்கு பிறகு நெடுஞ்சாலையை திறக்க அதிகாரிகளுக்கு பல மணி நேரம் ஆனதாக தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவின் நார்ட் ஸ்ட்ரீம் 1 குழாய் மூடல்...எரிவாயு வழங்கலில் சிக்கல்!
கலிபோர்னியா அமெரிக்காவின் பதப்படுத்தப்பட்ட தக்காளியில் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவும், உலகளாவிய பதப்படுத்தப்பட்ட தக்காளியில் கிட்டத்தட்ட பாதியளவும் உற்பத்தி செய்கிறது என்று மாநிலத்தின் தக்காளி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.