முதிய SBI வங்கி கணக்காளர்களை குறிவைத்து மோசடி! கம்போடியாவில் சித்ரவதை செய்யப்பட்ட 7 கேரள இளைஞர்
முதியவர்களை குறிவைத்து ஆன்லைன் திருட்டில் ஈடுபடுமாறு வற்புறுத்தி கொடுமைப்படுத்தப்பட்டதாக கம்போடியாவில் இருந்து தப்பிய 7 கேரள மாநில இளைஞர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தப்பிய கேரள இளைஞர்கள்
கம்போடியாவின் Poipet-இல் செயல்படும் சீன நிறுவனங்களில் வேலை என்று ஏமாற்றி டிஜிட்டல் அடிமைகளாக கொடுமைப்படுத்தப்பட்ட 7 கேரள இளைஞர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.
வேலைவாய்ப்புக்காக கம்போடியா சென்ற இவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பல நாட்கள் கொடுமைப்படுத்தப்பட்டதோடு முதியவர்களை குறிவைத்து மோசடி செயலில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து நாடு திரும்பிய இவர்கள் வழங்கிய தகவலின் படி, முதலில் தாய்லாந்தில் உள்ள விளம்பர நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியது, ஆனால் பின்னர் தாங்கள் கம்போடியன் நிறுவனத்தில் பணிபுரியுமாறு வற்புறுத்தப்பட்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டோம் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சீன நாட்டினர் நடத்தும் 300க்கும் மேற்பட்ட மோசடி நிறுவனங்கள், SBI வங்கி கணக்கு வைத்துள்ள 60 முதல் 80 வயதுடைய இந்திய முதியவர்களை குறிவைக்கின்றனர் என்றும், இந்த நிறுவனங்கள் தினமும் 3 முதல் 3.5 கோடி வரை மோசடி மூலம் லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் மோசடியின் மையமாக செயல்படும் கம்போடியா
இந்நிலையில் கம்போடியாவில் அதிகரித்து வரும் மனித கடத்தல் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில்,வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை தேடும் இந்தியர்களை குறிவைத்து மோசடிக்காரர்கள் அவர்களை கம்போடியாவுக்கு கவர்ந்து சென்று, அவர்களை ஆன்லைன் நிதி மோசடி மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
அதே சமயம் கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்த குற்ற செயல்களின் முக்கிய மையங்களாக உள்ளன என்று உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு கண்டறிந்துள்ளது.
மேலும், கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் சுற்றுலா விசாவில் வேலை தேடுவதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது, இது கம்போடியாவில் சட்டவிரோதமானது என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் மோசடி
உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவின் தகவல்களின்படி, சைபர் குற்றவாளிகள் தினமும் சுமார் ரூ.6 கோடி வரை டிஜிட்டல் மோசடி மூலம் திருடுகின்றனர். இதனால் இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் ரூ.2,140 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் வரை, சைபர் பிரிவு 92,334 டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |