திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டு: உயிரிழந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்
திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுக்கு பிறகு கேம்பிரிட்ஜ் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்
41 வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வி சமூகவியல் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே(Jason Arday) லண்டன் பேட்டர்சீ(Battersea) பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது, மேலும் இதில் சந்தேகத்திற்குரிய விவகாரங்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேசன் ஆர்டே மீது எழுந்த விமர்சனங்கள்
ஜேசன் ஆர்டே கடந்த 2023ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மிக இளைய கறுப்பின பேராசிரியராக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்து இருந்தார். இருப்பினும் கடந்த மாதம் அவர் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தில் சமர்பித்த முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை மீது திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
ஜேசன் ஆர்டே கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு வெளியான மாணவர் ஒருவரின் கட்டுரையின் பல உள்ளடக்கங்களை கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
ஜேசன் ஆர்டே அந்த மாணவரின் பெயரை அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஆரம்ப காலத்தில் அவருக்கு இருந்த ஆட்டிசம் குறைபாடு, அவரது தடகள நிதி திரட்டும் முயற்சி ஆகியவையும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
ராஜினாமா செய்த ஜேசன் ஆர்டே
இந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஜேசன் ஆர்டே தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.
மேலும் தன்னுடைய சக ஊழியர்களுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் ஊகங்கள் ஆகியவை கல்விசார் விவாதங்களை தாண்டி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பாதித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பதவி விலகல் முடிவால் யாரும் நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |