ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் ட்ரம்ப்: சட்டப்படி சாத்தியமா?
Can Donald Trump legally declare Strait of Hormuz US territory? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் நிலையில், அது சட்டப்படி சாத்தியமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு அமெரிக்கப் பிராந்தியம் என அறிவித்துள்ளார்.
அப்படி அவர் ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்கப் பிராந்தியம் என சட்டப்படி அறிவிக்கமுடியுமா?
ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் ட்ரம்ப்
முதலில், டிரம்ப், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பலை பாரசீக வளைகுடாவிற்கு அருகில் நிறுத்தி ஹோர்முஸ் ஜலசந்தியை மூட முயன்றார்.
பின்னர், அந்த நீர்வழிப்பாதை நெடுகிலும் இருந்த ஈரானிய துறைமுகங்களில் கப்பல்கள் நுழைவதையும், வெளியேறுவதையும் தடுத்தார்.

இப்போது, அவர் மேலும் ஒரு படி முன்னேறி, ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு அமெரிக்கப் பிராந்தியமாக அறிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் அந்த நீர்வழிப்பாதையை, ஒரு 'புதிய அமெரிக்கப் பிராந்தியமாக' காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார் ட்ரம்ப்!
சட்டப்படி சாத்தியமா?
விடயம் என்னவென்றால், ஹோர்முஸ் ஜலசந்தி, வடக்கே ஈரானுக்கும் தெற்கே ஓமானுக்கும் இடையில் அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த இரண்டு நாடுகளின் கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரையிலான பகுதி அந்த நாடுகளுக்குச் சொந்தம்.

அமெரிக்கா இதில் எந்த உரிமையும் கோர முடியாது.
அதே நேரத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி இரண்டு நீர்வழிகளை இணைப்பதாலும், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாலும், ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின் 37 - 44 பிரிவுகளின்படி அது ஒரு சர்வதேச ஜலசந்தியாகும்.
போக்குவரத்து வழித்தட விதிமுறையின்படி, அனைத்துக் கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை வழியாகத் தடையின்றிப் பயணிக்கும் உரிமை உண்டு, கடலோர நாடுகள் இந்த உரிமைகளை இடைநிறுத்தம் செய்ய முடியாது.
மேலும், எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் நீர்வழியையோ அல்லது வேறு எந்த சர்வதேச நீர்நிலையையோ தனக்குச் சொந்தமானது என உரிமை கோருவதை சர்வதேச சட்டம் அனுமதிப்பதில்லை.
அமெரிக்கா ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தில் ஓர் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அதன் விதிகளை அதனால் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், அந்த ஒப்பந்தம், ஒரு சர்வதேசச் சட்டமாக மதிக்கப்படுகிறது.
ஆக, ட்ரம்ப் எதையாவது சொல்வார், சற்று நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கிவிடுவார். இப்போது ஹோர்முஸ் ஜலசந்தியைக் குறித்து அப்படி ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். இதுவும் அதேபோல்தானா என்பது தெரியவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |